போடி, ஜூன் 7: போடி அருகே மாமூல் கேட்டு கல்குவாரி உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை, மகன் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். தேனி மாவட்டம், போடி அருகே தேவாரம் ஓவுலாபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (58). இவர் சின்னமனூர் ஒன்றியத்தில் உள்ள பொட்டிபுரம் பகுதியில் கல்குவாரி வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், முத்தையன் செட்டிபட்டியை சேர்ந்த மதன்குமார் மற்றும் அவரது மகன் பிரதீப் குமார் ஆகியோர் மனோகரனை சந்தித்து மாமூல் கேட்டு மிரட்டி வந்துள்ளனர். அப்படி, கடந்த மே 24ம் தேதி தந்தை மகன் இருவரும் மனோகரன் வீட்டிற்கு சென்று மறுபடியும் மாமூல் கேட்டபோது, மனோகரன் மாமூல் தர முடியாது என மறுத்து விட்டார்.
இதில் ஆத்திரமடைந்த மதன்குமார் மற்றும் அவரது மகன் பிரதீப் குமார் நேற்று முன் தினம் பொட்டிபுரத்தில் உள்ள மனோகரனுக்கு சொந்தமான தோட்டத்தினை ஜேசிபி இயந்திரம் மூலம் சேதப்படுத்தினர். இது குறித்து மனோகரனுக்கு அவரது மகள் பவித்ரா தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்து மனோகரன் விசாரித்த போது, மாமூல் தரவில்லை என்றால் இப்படித்தான் செய்வோம். ஜேசிபியால் ஏற்றி கொலை செய்து விடுவோம் என மதன்குமாரும், பிரதீப் குமாரும் மனோகரனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து மனோகரன் போடி தாலுகா போலீசில் அளித்த புகாரின் பேரில் எஸ்ஐ விஜய் கொலை மிரட்டல் விடுத்த மதன்குமார் மற்றும் பிரதீப்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றார்.