போடி, மே 21: தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி 33 வார்டுகளை கொண்டும், போடி ஊராட்சி ஒன்றியத்தில் 15 கிராம ஊராட்சிகள், மீனாட்சிபுரம், மேல சொக்கநாதபுரம், பூதிபுரம் உள்ளிட்ட மூன்று பேரூராட்சிகளும், மற்றும் பல பகுதிகள் சேர்ந்து விரிவடைந்துள்ள போடிநாயக்கனூர் சட்டமன்றத்தொகுதியாக இருக்கிறது. இவைகளில் போடி தாலுகா அலுவலகம் போடிநாயக்கனூர், ராசிங்காபுரம், கோடாங்கிபட்டி என மூன்று பிர்க்காக்களை கொண்டு வருவாய் கிராமமாக செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஒரு பிர்காவான போடி நகருக்கு போடி பஸ் நிலையம் பின்புறம் ஜக்கமநாயக்கன்பட்டி இடையே வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் அதன் அருகில் மேலசொக்கநாதபுரம் கிராம அலுவலகமும் ஒரே வளாகத்திற்குள் இயங்கி வருகிறது. விஏஓ அலுவலகம் மற்றும் வருவாய் ஆய்வாளர் அலுவலகமும் கடந்த 1984ம் ஆண்டு கட்டப்பட்டது.
இந்த இரண்டு அலுவலகமும் 40 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில் கட்டிட சுவர்கள் விரிசல் விட்டும், மேற்கூரை பழுதாகி மழை பெய்தால் உள்ளே ஒழுகும் நிலையும் ஏற்பட்டது. மேலும், மழைக்காலங்களில் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் நனைந்து பாதிக்கப்படும் நிலையும் இருந்து வந்தது. இதனால் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களும் பெரும் சிரமம் அடைந்தனர். இந்நிலையில் பழுதடைந்த கட்டிடத்தை அகற்றி விட்டு புதிதாக வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கட்ட வேண்டும் என படத்துடன் செய்தியினை வெளியிட்டது. அந்த செய்தியின் எதிரொலியாக மாவட்ட நிர்வாகம் தமிழக அரசுக்கு அறிக்கையாக அனுப்பி புதிய கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி மற்றும் நிதியும் ஒதுக்கக் கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து தமிழக அரசு வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கட்டுவதற்கான அனுமதியை வழங்கியது.
அதன்படி மாவட்ட நிர்வாகம் பழைய வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கடந்த 6 மாதத்திற்கு முன்பாக இடித்து அகற்றப்பட்டது. தற்போது, அந்த வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலத்தில் சேர்ந்து இயங்கி வருகிறது. செய்தி எதிரொலியாக கட்டிடம் அகற்றப்பட்டு தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு மேலான நிலையில், புதிய கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் இன்னும் துவங்கப்படாமலேயே உள்ளது. தற்போது கிராம நிர்வாக அலுவலகத்தில் இரு அலுவலகமும் சேர்ந்து செயல்படுவதால் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். இந்நிலையில், புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘ஆர்ஐ அலுவலக வளாகத்தில் இருந்த மூன்று இலவமரங்கள் வெட்டி அகற்றப்பட்டது. ஆனாலும், வேரோடு அகற்றப்படாததால், புதிய அலுவலகம் கட்டினாலும் உள்ளே இருக்கும் தூர்களால் அதனின் வேர்கள் ஊடுருவி கட்டிடங்களின் சுவர்களை விரைவில் தாக்கும் நிலை ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், புதிய கட்டிடம் கட்டுவதற்கு முன்பாக மண்ணில் இருக்கும் மரங்களில் வேர்களை முழுவதுமாக அகற்றி தரையை முழுமையாக மாற்றி அமைத்து தர வேண்டும் பொதுப்பணித்துறையினரிடம் அதிகாரிகள் என கோரிக்கை வைத்துள்ளனர். இப்பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் இருப்பதால், புதிய கட்டிடம் கட்டும் பணி தாமதமாகிறது. புதிய கட்டிடம் பணிகள் துவங்குவதற்கு, அதுவும் ஒரு முக்கிய காரணமாக இருப்பதால், அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும்’’ என்றனர்.