போடி, ஜூலை 19: போடிமெட்டு மலைச்சாலையில் கடந்த மாதம் நிகழ்ந்த சாலை விபத்தில், 200 அடி பள்ளத்தில் உருண்ட கார் நேற்று, கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது. கர்நாடக மாநிலம் பெங்களூரு குல்பர்காவைச் சேர்ந்தவர் சஞ்சீவி ரெட்டி(50). இவர் தனது குடும்பத்தினருடன் காரில், கடந்த மாதம் 5ம் தேதி, கேரள மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்த்துவிட்டு, மூணாறு வழியாக போடிக்கு வந்துகொண்டிருந்தார்.
அப்போது போடி மெட்டுச்சாலை புலியூத்து அருகே 4வது கொண்டை ஊசி வளைவில், முன்னாள் சென்ற வாகனத்தை முந்த முயன்றபோது, நிலைதடுமாறி சாலையோர தடுப்புச்சுவரை உடைத்து 200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சஞ்சீவி ரெட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி அம்பிகா (42), மகள் கீர்த்திகா (8), மகன் கரண்(11), உறவினர்கள் வைஷாலி (18), விஜய் (35), ஹர்சா (24) ஆகியோர் படுகாயமடைந்து போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று திரும்பினர். இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக மீட்கப்படாமல் இருந்த கார், குரங்கணி காவல்நிலைய போலீசாரின் உதவியோடு கிரேன் மூலம் நேற்று மீட்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.