ஈரோடு, ஆக. 14: ஈரோடு அடுத்த கொங்கம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்ரமணி (69). இவர், சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக சிறுமியின் பெற்றோர் பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி சுப்ரமணியை போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதேபோல் அந்தியூர் தவுட்டுப்பாளையத்தை சேர்ந்த வெங்கட் ரேணுகா (67). இவர், சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின்பேரில், பவானி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, வெங்கட் ரேணுகா மீது போக்சோ வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் ஈரோடு எஸ்பி ஜவகர், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரைத்தார். இந்த பரிந்துரையை ஏற்ற கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, சுப்ரமணி, வெங்கட் ரேணுகா ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், பவானி மகளிர் போலீசார் கோவை மத்திய சிறைக்கு சென்று, சுப்ரமணி, வெங்கட் ரேணுகா இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கினர்.