கோத்தகிரி, மே 11: கோத்தகிரியில் போக்குவரத்து காவல்துறையினர், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு போதை ஒழிப்பு, போக்குவரத்து விதிமீறல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு போதை குறித்த விழிப்புணர்வு செய்யப்பட்டது. தற்போது உள்ள கால கட்டத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவு கஞ்சா, மது, புகையிலை போன்ற கொடிய போதை பழக்கங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் அறிவுறுத்தலின் படி கோத்தகிரி போக்குவரத்து ஆய்வாளர் பதி தலைமையில் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளான கோத்தகிரி பேருந்து நிலையம், மார்க்கெட், காமராஜர் சதுக்கம், ராம்சந்த், டானிங்டன் போன்ற பகுதிகளில் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு போதையினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் தற்போது கோடை காலம் துவங்கி அதிக அளவு சமவெளி பகுதிகளில் இருந்து மாவட்டத்திற்கு அதிக சுற்றுலா பயணிகள் வருகை புரிவதையொட்டி மலைப்பாதைகளில் சாலை விதிகளை பின்பற்றி வாகன விபத்து ஏற்படாதவாறு வாகனங்களை இயக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
குறிப்பாக மலைப்பாதையில் பயணிக்கும் போது மிகக்குறுகிய வளைவுகளில் வாகனங்களை முந்தக்கூடாது. அதிக பாரம் ஏற்றி வாகனங்களை இயக்க கூடாது, மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்க கூடாது. சீட் பெல்ட் அணிய வேண்டும். தாழ்வான பகுதிகளில் பயணிக்கும் போது இரண்டாவது கியரில் வாகனங்களை இயக்கவும் அறிவுறுத்தப்பட்டது. விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோத்தகிரி போக்குவரத்து காவலர்கள் அப்பாஸ், ரஞ்சித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.