லால்குடி, ஜூலை 9: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நெருஞ்சலக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மாந்துறை தனியார் குடியிருப்பில் வசித்து வருபவர் ஜீவானந்தம் மனைவி புவனேஸ்வரி. புள்ளம்பாடியில் பேக்கரி நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து மெயின் ரோட்டில் உள்ள கடைக்கு வந்து சாமான்கள் வாங்கி விட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் புவனேஸ்வரியிடம் முகவரி கேட்பது போல் சென்று அவரை கீழே தள்ளி விட்டு, அவர் கழுத்தில் கிடந்த எட்டரை பவுன் நகையை பறித்து கொண்டு தப்பியோடினர்.
அதேபோல், லால்குடி அகிலாண்டேஸ்வரி நகர் வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த செல்வம் மனைவி உஷா. இவர் நேற்று முன்தினம் இரவு கணேஷ் நகர் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது, பைக்கில் வந்த வாலிபர்கள் அவரது கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றனர். உடனே சுதாரித்துக் கொண்ட உஷா தனது கைகளால் செயினை இறுக பிடித்து கொண்டார். இதில், கால் பவுன் செயினை பறித்து கொண்டு வேகமாக தப்பிச் சென்றனர்.