தஞ்சாவூர், மே 31: 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
தஞ்சை அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நேற்று காலை சி.ஐ.டி.யூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிளை தலைவர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில், 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடாததை கண்டித்தும், 12 மாத நிலுவைதொகை அபகரிப்பு, 2003-ம் ஆண்டுக்கு பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பென்ஷன் வழங்குவது குறித்து பேசாதது, ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி வழங்காததை கண்டித்தும், பணியின் போது உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மத்திய சங்க துணை தலைவர் வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் அன்பு, பொருளாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.