திருவாடானை, ஜூலை 23: திருவாடானையில் இருந்து சின்னக்கீரமங்கலம், ஓரிக்கோட்டை, நெய்வயல் வழியாக தேவகோட்டை செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் உள்ள சின்னக்கீரமங்கலம் மகளிர் காவல் நிலையம் அருகே இந்த சாலையில் புதிய பாலம் கட்டும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. அந்த பாலம் கட்டும் பணி முடிவடைந்த நிலையில், அதே இடத்தில் வாகன போக்குவரத்திற்காக சாலை அகலப்படுத்தும் பணியும் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் அந்த இடத்தில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறுவதற்கு போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவே மின்கம்பம் உள்ளதால் அந்த பணி நடைபெறுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆகையால் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தை முதலில் அகற்ற வேண்டும். பின்னர் சாலை அகலப்படுத்தும் பணியினை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.