திருவள்ளூர், மே 21: திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் சாலையை தூய்மைப்படுத்தும் பணியை நகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நகரின் மையப்பகுதியான செட்டித்தெரு, ஜெ.என். சாலை உள்ளிட்ட பகுதிகளில் மீனவ மக்கள் சாலை ஓரத்தில் கடைகள் வைத்து மீன் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் சாலையோரத்தில் உள்ள மீன் கடைகளை அமைத்து, போக்குவரத்திற்கு இடையூறு செய்வதாக, நகராட்சி ஆணையருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையர் த.வ.சுபாஷினி உத்தரவின் பேரில் நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் இருந்த 20க்கும் மேற்பட்ட மீன் கடைகளை அப்புறப்படுத்தி சாலையை சுத்தப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்து பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் இனிவரும் காலங்களில் சாலை ஓரத்தில் மீன் கடை, இறைச்சி கடைகளை வைத்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் த.வ.சுபாஷினி எச்சரித்துள்ளார். அதே போல் நகராட்சிக்குட்பட்ட மாநில நெடுஞ்சாலை பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டு இருக்கும் பூக்கடைகள், பழக்கடைகள், காய்கறி கடைகள் ஆகியவற்றையும் அகற்றி திருவள்ளூர் நகரில் சாலை விபத்துகள் ஏற்படாத வகையிலும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையிலும் இருக்க நடவடிக்கை எடுக்குமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.