நன்றி குங்குமம் தோழி வாசகர் பகுதி*முகம் பளபளவென்று இருக்க வேண்டுமா? இரவில் படுக்கச் செல்வதற்கு முன் ஒரு ஸ்பூன் தேனில் இரண்டு சொட்டு எலுமிச்சம் பழச்சாறு கலந்து முகத்தில் தடவ வேண்டும். காலை எழுந்தவுடன் கடலை மாவைக் குழைத்து பாலேட்டுடன் முகத்தில் தேய்த்து பதினைந்து நிமிடம் கழித்து கழுவினால் முகம் பளபள வென்று பிரகாசமாகப் பளிச்சிடும். சிலருக்கு அதிக நேரம் முகத்தில் எதையும் தேய்த்து வைத்திருந்தால் ஜலதோஷம் பிடிக்கும். அதனால் இரவு முழுவதும் தேன், எலுமிச்சைச் சாற்றை வைக்காமல் படுக்கப் போகும் முன் அரை மணி நேரம் வைத்திருந்து முகத்தை கழுவிடலாம்.*முகம் பளபளப்பாகவும், சிவப்பாகவும் இருக்க தக்காளி, தயிர், கடலைமாவு இவற்றோடு சந்தனத்தையும், பால் ஏட்டையும் சேர்த்து முகத்தில் பூசிப் பதினைந்து நிமிடம் கழித்து சீயக்காய்ப் பொடியால் கழுவ முகம் பளிச்சென்று இருக்கும். *பெண்களுக்கு முகத்தில் பரு இருந்தால், மஞ்சள் கிழங்கை நன்றாக இடித்து நல்லெண்ணெயில் வதக்கி பரு உள்ள இடத்தில் மிதமான சூட்டில் தடவி வந்தால் பரு மறையும்.*வாரம் ஒரு முறை நீராவியில் முகத்தைக் காட்டி ஆவி பிடித்து வந்தால் முகத்திலுள்ள நுண்ணிய அழுக்குகள் வெளியேறும். பருக்கள் வராது.*வெண்ணெய் சுற்றி வரும் காகிதங்களைத் தூக்கி எறியாமல், அதை உதட்டிலும், முகத்திலும் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவினால் சருமம் ஈரத்தன்மையுடன் இருக்கும்.*பாலாடை, தேன் இரண்டு சொட்டு, எலுமிச்சைச் சாறு, பன்னீர் குழைத்து முகத்தில் தடவி காய்ந்தவுடன் கழுவ வேண்டும். மாதம் இரு முறை செய்தால் முகம் பளபளவென்று இருக்கும்.*பசும்பாலில் ஒரு தேக்கரண்டி கசகசாவை இரவில் ஊற வைத்து காலை மைய அரைத்து முகத்தில் தேய்த்து வர முகம் சிகப்பழகு பெறும். *முட்டை வெள்ளைக் கருவுடன் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி காய்ந்ததும் இளம் சூடான நீரில் கடலை மாவு, சீயக்காய் கலந்து கழுவினால், பரு பிரச்னை நீங்கும்.*உருளைக் கிழங்கு சாறு, வெள்ளரிக்காய்ச் சாறு, லெமன் ஜூஸ், சந்தனப் பவுடர், பாதாம் பவுடர், தயிர், அரிசி மாவு தலா ஒரு ஸ்பூன் எடுத்துக் கலந்து முகத்தில் பூசி பதினைந்து நிமிடம் ஊறிய பின் கழுவலாம். *இளநீரில் மஞ்சள் தூளைக் குழைத்து முகத்தில் பூசினால் பருக்கள் மறையும்.*குளிர்ந்த நீரில் சிறிதளவு பாலை கலந்து அதைப் பஞ்சில் தொட்டு முகத்தில் பூசி அரைமணி நேரம் சென்றதும் முகத்தைக் கழுவி வந்தால் நாளடைவில் முகம் பளபளப்பாக மிருதுவாக மாறும்.– ஆர். ஜெயலெட்சுமி, திருநெல்வேலி.…