அணைக்கட்டு,அக். 25: அணைக்கட்டு அருகே விஜயதசமியை யொட்டி பொற்ெகாடியம்மனுக்கு பார்வேட்டை உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா வல்லண்டராமம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பொற்கொடியம்மன் ஊர் கோயில், அருகே உள்ள வேலங்காடு கிராம ஏரியில் பொற்கொடியம்மன் ஏரி கோயில் உள்ளது. இதில் வல்லண்டராமம் கிராமத்தில் உள்ள ஊர் கோயிலில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை மற்றும் நவராத்திரி கடைசி நாளான விஜயதசமி அன்று பார்வேட்டை உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு வல்லண்டராமம் பொற்கொடியம்மன் கோயிலில் நவராத்திரி விழா கடந்த 15ம் தேதி தொடங்கியது. நவராத்திரி விழா தொடங்கிய நாள் முதல் தினம் தோறும் அன்னபூரணி, காமாட்சி, துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி உள்ளிட்ட அலங்காரங்களில் உற்சவர் பொற்கொடியம்மன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைத்தொடர்ந்து நவராத்திரி நிறைவு நாள் விஜயதசமியான நேற்று பொற்கொடியம்மனுக்கு பார்வேட்டை உற்சவம் நடந்தது.
இதையொட்டி ஊர் கோயில் மற்றும் ஏரி கோயிலில் உள்ள மூலவர் பொற்கொடியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து, பார்வேட்டை உற்சவத்திற்காக வல்லண்டராமம் கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட உற்சவர் பொற்கொடியம்மனை ஊர்வலமாக அந்த ஊரில் உள்ள குளக்கரை பகுதிக்கு எடுத்துச் வந்தனர். பின்னர் சுவாமியை அங்கு இறக்கி வைக்கப்பட்டு 4 கிராம மேட்டுக்குடிகள், பக்தர்கள் அறநிலையத்துறையினர் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்து பார்வேட்டை உற்சவம் வழக்கம்போல் நடத்தப்பட்டது. பின்னர், அங்கிருந்து மீண்டும் அம்மனை தோள்மேல் தூக்கி ஊர்கோயிலுக்கு எடுத்துவரப்பட்டு அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. கோயிலில் உற்சவர் பொற்கொடியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், கோயில் செயல் அலுவலர் அண்ணாமலை, ஊராட்சி மன்ற தலைவர் சைனலதாமணி வல்லாண்டராமம், வேலங்காடு, அன்னாசிபாளையம், பனங்காடு உள்ளிட்ட 4 கிராம மேட்டுக்குடிகள், கோயில் எழுத்தர் ஆறுமுகம் மற்றும் பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.