நெல்லை, ஏப்.14: நாங்குநேரியை சேர்ந்தவர் பத்மராஜா (39). இவர் நாங்குநேரி அண்ணா சாலையில் பால் பொருட்கள் விற்பனை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர் கடையில் பால் பாக்கெட் மற்றும் ஐஸ்கிரீம் வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த பெண் ஊழியர் பொருட்களை எடுத்து கொண்டிருக்கும் போது திடீரென மர்ம நபர் அங்கிருந்து நழுவி சென்று விட்டார். நீண்டநேரத்திற்கு பின் ஊழியர் அலமாரியில் பார்த்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.11,500யை காணவில்லை.
பொருட்கள் வாங்குவது போல் நடித்து மர்ம நபர் பணத்தை திருடிச் சென்றதை அறிந்த கடை ஊழியர் அதிர்ச்சி அடைந்தார். இதுபோல நாங்குநேரி டோல்கேட் அருகே கணபதி என்பவரின் டீக்கடைக்கு தலைகவசம் அணிந்தவாறு சென்ற மர்ம நபர் திண்பண்டங்கள் வாங்குவது போல் நடித்து, பட்டறையில் வைக்கப்பட்டிருந்த ரூ.3500யை திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. நாங்குநேரி டி.எஸ்.பி ராஜு, இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். டீக்கடை மற்றும் பால் விற்பனை கடையில் கைவரிசை காட்டியது ஒரே நபராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.