அரியலூர், ஆக, 17: சிறு குறு தொழில் தொடங்க தொழில்கடன் முகாம் வரும் ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 6 வரை நடைபெற உள்ளது. இதுகுறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு நிதிக் கழகமாகும். 1949ம் ஆண்டு துவங்கப்பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கியுள்ளது.
இக்கழகம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் கீழ் கடன் வழங்கி வருகிறது.
திருச்சி கிளை அலுவலகத்தில் 22, கே.ஆர்.டி. பில்டிங், 2வது தளம், பிராமினேட் கோடு, கண்டோன்மென்ட், திருச்சி 620001. குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில்கடன் முகாம் வரும் ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 6 வரை நடைபெற உள்ளது.
இச்சிறப்பு தொழில்கடன் முகாமில் டி.ஐ.ஐ.சி. யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனமேம்பாட்டுத் திட்டம். அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன் திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதிபெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியம் ரூ.150 லட்சம் வரை வழங்கப்படும்.
இந்தமுகாம் காலத்தில் சமர்பிக்கப்படும் பொதுக்கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை அளிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்துதொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். மேலும் தகவலுக்கு 0431-2460498, 2414177, 9443110899, 9445023457 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.