வேலூர், ஆக.21: பொய்கை மாட்டுச்சந்தையில் நேற்று கால்நடைகள் வரத்து அதிகரித்த நிலையில் விற்பனையும் ₹70 லட்சம் வரை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தின் முக்கிய கால்நடை வாரச்சந்தைகளில் பொய்கை மாட்டுச்சந்தை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் நடைபெறும் இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. கோடை காலம் முடிவடைந்த நிலையில், தென்மேற்கு பருவ மழை பொழிவும், அடுத்து வடகிழக்கு பருவமழை சீசன் வருவதாலும் தீவனப்பற்றாக்குறை இருக்காது. இதனால் கறவை மாடுகளையும், உழவு மாடுகளையும் அதிகளவில் வாங்க விவசாயிகளும், கால்நடை வளர்ப்போரும் ஆர்வம் காட்டலாம் என்பதால் நேற்று கால்நடைகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதில் கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள் என 2 ஆயிரம் மாடுகள் வரை சந்தையில் குவிந்தது. இதனால் விற்பனையும் ₹70 லட்சம் வரை நடந்ததாகவும் விவசாயிகளும், கால்நடை வியாபாரிகளும் தெரிவித்தனர். அதோடு மழைக்காலம் நெருங்கும் நிலையில் தீவனம் தாராளமாக கிடைக்கும் நிலை உள்ளதால் கால்நடைகள் விற்பனை வருங்காலங்களில் டல்லடிக்கலாம் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.