திருப்போரூர்: பொன்மார் ஊராட்சியில் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில கட்டி முடிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கணொலி காட்சி மூலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய பொன்மார் ஊராட்சியில் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் புதிதாக கட்டப்பட்டது. இதனை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்தார். ெபான்மார் ஊராட்சியில் நடைபெற்ற இதற்கான விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சினேகா தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீ நாராயணன் வரவேற்றார். ஒன்றிய குழு உறுப்பினர் சுரேஷ் முன்னிலை வகித்தார். காஞ்சிபுரம் எம்பி செல்வம், புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தினை திறந்து வைத்து, பேசினார். திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி, திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் ஆகியோர் பொதுமக்களுக்கு மருந்து, மாத்திரைகளை வழங்கினர். இந்நிகழ்வில், சுகாதாரத்துறை இணை இயக்குநர் பானுமதி, திருப்போரூர் ஒன்றிய ஆணையாளர் அரிபாஸ்கர் ராவ், வட்டார வளர்ச்சி அலுவலர் பூமகள்தேவி, ஊராட்சி துணை தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.