ஜெயங்கொண்டம், ஜூன் 19: அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளியில் புகையிலை மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு தலைமை ஆசிரியர் ஜோதிலிங்கம் தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பஞ்சாபகேசன் வரவேற்றார். அரியலூர் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையத்தின் மாவட்ட ஆலோசகர் மருத்துவர் பிரியா புகையிலை இல்லா சுற்றுச்சூழலை உருவாக்குவோம், புகையிலைப் பொருட்களால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். சமூக பணியாளர் புகையிலை ஒழிப்புக்கான உறுதி மொழியை வாசிக்க, மாணவ, மாணவிகள் அனைவரும் பின் தொடர்ந்து வாசித்தனர். இதில், சுகாதார ஆய்வாளர் திலீபன் மற்றும் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் போதை ஒழிப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் நன்றி கூறினார்.