Tuesday, June 6, 2023
Home » பொன்னை உரைத்துத் தன்னை அறிந்த சுந்தரர்

பொன்னை உரைத்துத் தன்னை அறிந்த சுந்தரர்

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் ஆன்மிகம் திருநாவுக்கரசு சுவாமிகள், திருநல்லூரில் பதிகம் பாடும்போது நல்லூரில் சிவன் தன் கோலம் காட்டி காட்சி நல்கும்போது, அடியார்கள் அதனைக் கண்டு கொள்ளாமல் ஆற்றில் தவறவிட்ட பொருளைக் குளத்தில் தேடுவார்போல், காற்றைவிட கடுமையாகச் சென்று உலகு எல்லாம் தேடுகிறார்களே என, தேற்றப்படத் திருநல்லூர் அகத்தே சிவன் இருந்தால்

தோற்றப்படச் சென்று கண்டுகொள்ளார், தொண்டர், துன்மதியால்;
ஆற்றில் கெடுத்துக் குளத்தினில் தேடிய ஆதரைப் போல் காற்றின் கடுத்து உலகு எல்லாம் திரிதர்வர், காண்பதற்கே. என்ற தேவாரப் பாடல் வழி சுட்டிக்காட்டியுள்ளார்.

இது 7-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்ததாகும். அப்பரடிகளின் காலத்திற்கு ஒரு நூற்றாண்டு பின்பு வாழ்ந்த சுந்தரரோ, திருமுதுகுன்றத்து (விருத்தாசலத்து) ஈசனின் வாக்கால் தான் பெற்ற பொன்னை ஆற்றிலிட்டார். அதனைக் குளத்திலும் தேடினார். சுந்தரர் பெற்ற அனுபவத்தை இனி விரிவாகக் காண்போம்.சோழநாட்டில், தலப்பயணம் மேற்கொண்ட நம்பியாரூரர் (சுந்தரர்) திருவானைக்காவினை அடைந்தபோது திருத்தொண்டர்கள் எதிர்கொண்டு, திருக்கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். பெருமானின் சேவடிகளை வணங்கிய சுந்தரர் “மறைகள் ஆயின நான்கும்” எனத் தொடங்கும் பதிகத்தினை அங்கு பாடினார். அதில் ஏழாம் பாடலாக,“தாரம் ஆகிய பொன்னித் தண்துறை ஆடி விழுத்துநீரில் நின்று அடிபோற்றி நின்மலர் கொள் என ஆங்கேஆரம்கொண்ட எம் ஆனைக்கா உடைய ஆதியை நாளும்ஈரம் உள்ளவர் நாளும் எம்மையும் ஆளுடையாரே”எனப் பாடியுள்ளார்.இதுபற்றிச் சேக்கிழார் பெருமான் விரிவுறக் கூறியுள்ளார்.சோழர்களின் தலைநகரமாக விளங்கியது உறையூர். காவிரியின் தென்கரையில் உள்ள உறையூரில் இருந்த சோழமன்னன், ஒருநாள் அங்கு காவிரியின் தென்கரையில் மூழ்கி நீராடும்போது அவன் சூடியிருந்த மணியாரம் வழுவி நீரில் அடித்துச் சென்றது. அதைக் கண்ட சோழன் வருந்தி, இறைவனை வேண்டி நின்றான். அந்த ஆரமோ உறையூருக்குக் கிழக்கில் திருவானைக்கா கோயில் சிவபெருமானுக்கு அபிடேகம் செய்யக் காவிரியின் வடகரையிலிருந்து எடுக்கப்பெற்ற குடத்துநீரில் புகுந்து, திருமஞ்சனம் ஆட்டும் போது அது சிவலிங்கத்தின் கழுத்தில் விழுந்தது. தான் காவிரியில் இழந்த மணியாரம் திருமஞ்சனக் குடம் புகுந்து ஆனைக் கா ஈசனுக்குச் சென்ற அருள்திறம் கண்டு மகிழ்ந்தான். இதனைத்தான் சுந்தரர் அழகு தமிழில் பதிகப் பாடல் வாயிலாகச் சுட்டியுள்ளார்.இங்கு ஆற்றில் தவறவிட்டது திருமஞ்சனக்குடம் புகுந்து சேரவேண்டிய இடத்தை அடைந்தது. திருவானைக்கா பெருமானை வணங்கிப் புறப்பட்ட சுந்தரர் கொங்கு நாடு சேர்ந்தார். பேரூரில் தில்லைத் தரிசனத்தைக் கண்டார். பல தலங்களை வழிபட்ட பிறகு கூடலையாற்றூர் சென்று பதிகம் பாடினார். பிறகு, அங்கிருந்து திருமுதுகுன்றத்தினை அடைந்தார். திருக்கோயில் கோபுரத்தை வணங்கி, கோயிலை வலம் வந்து உட்புகுந்தார். இறைவன் முன் நின்று, “நஞ்சி இடைநின்று நாளை என்று உம்மை நச்சுவர்” எனத் தொடங்கும் பதிகத்தினைப் பாடி வழிபட்டார். பதிகம் பாடிய பின்பு பெருமானிடம் பொருள்தர வேண்டினார். முதுகுன்று ஈசரும் தர அருள்பாலித்தார். உடன், “மெய்யை முற்றப் பொடிபூசி” எனத் தொடங்கும் பதிகத்தினைச் சுந்தரர் பாடி முடிக்க, இறைவன் பன்னிரண்டாயிரம் பொன்தனைக் கொடுக்க, அதனைப் பெற்ற சுந்தரர், கொடுக்கப் பெற்ற இப்பொன் முழுவதையும் எனக்கு ஆரூரில் கிடைக்குமாறு அருள வேண்டினார். அப்போது, திருமுதுகுன்றத்து ஈசனார் விண் ஒலியாக மணிமுத்தாற்றில் இப்பொன்னை இட்டு அதனை ஆரூரின் குளத்தில் போய் பெறுவாய் என்றார். பின்னர், அப்பொன்னிலிருந்து மச்சம் வெட்டிக்கொண்டு பொன் திரள் முழுவதையும் ஆற்றில் இட்டார். என்னை வலிய ஆட்கொண்ட அருளினை இதன்மூலம் அறிவேன் என்று கூறியவாறு, தில்லை மூதூர் நோக்கிச் சென்றார். அவர் கூறிய கூற்றுதான் இங்கு முக்கியமாக நாம் நோக்குதல் வேண்டும்.பின்பு, அங்கிருந்து புறப்பட்டு தில்லைமூதூர் சென்று சோழநாட்டுத் தலங்களை வணங்கி ஆரூரினைச் சென்றடைந்தார். மூலட்டானத்து ஈசனை வழிபட்ட பின்பு, பரவையார் திருமாளிகையினைச் சென்றடைந்தார். பரவையாருடன் தங்கி இருந்தபோது, ஒருநாள் சுந்தரர் பரவையாரை நோக்கி முன்பு திருமுதுகுன்றத்தில் ஈசன் எனக்களித்த பொன்னை மணிமுத்தாற்றில் இட்டு வந்தேன். அதனைக் கோயிலின் மேல்பால் உள்ள குளத்திலிருந்து எடுத்து வருவோம் எனப் புகல பரவையாரோ நகைப்புற்றார். பரவையாருடன் திருக்கோயிலினை வலம் வந்து குளத்தின் வட கீழ்க்கரையை அடைந்தார். பரவையாரைக் கரையில் நிற்கச்செய்து குளத்தினில் இறங்கி பொன்திரளைத் தேடலானார்.அதுகண்டு பரவையார் ஆற்றிலிட்டுவிட்டுக் குளத்தில் தேடுகிறீரே? இதுவோ அருள் என்று எள்ளி நகைத்தார். உடனே சுந்தரர், “பொன் செய்த மேனியினீர்” என்ற பதிகத்தை இடுப்பளவு நீரில் நின்றவாறு பாடலுற்றார். பரவையார் வருந்தாமல் இருக்க அடியேன் இட்டளம் கெடவே (அடியேன் வருத்தம் தீரவே) அருள்வாய் எனப் பாடல்கள்தோறும் குறிப்பிட்டு முதுகுன்றம் அமர்ந்த பிரானை வேண்டினார். எட்டுப் பாடல்கள் வரை அவர் ஆற்றிலிட்ட இட்டளத்தை (பொன்னை)த் தராதிருந்த முதுகுன்றத்து ஈசன் எட்டாவது பாடலான “ஏத்தாது இருந்தறியேன்” என்ற பாடலைப் பாடியளவில் பொன்திரளை அவர் கையில் அகப்படுமாறு செய்தார். அவற்றை எடுத்த சுந்தரர், தான் முன்பு மச்சம் வெட்டி வைத்திருந்த பொன்னோடு அதனை உரைத்துப் பார்த்தார். ஈசனின் திருவிளையாடலால், பொன்னின் தரம் தாழ்ந்து இருந்தது. அதைக் கண்ட சுந்தரர், “மாலயனுக்கு அரிய கழல் என்ற பாடலைப் பாட பொன்னின் தரம் மச்சம் வெட்டிய அளவுக்குக் குறையாமல் மாறி இருந்தது. மாற்றுக் குறையாத தன்மையினை அறிந்து இறைவனின் அருட்திறத்தினை அறிந்து போற்றிப் பரவினார்.அதனைக் கூறும் சேக்கிழார் பெருமான் “மீட்டும் அவர் பரவுதலும் மெய்யன்பர் அன்பில் வரும் பாட்டு வந்து கூத்து வந்தார் படுவாசி முடிவெய்தும்” எனக் குறிப்பிட்டிருப்பதால் மீண்டும் ஒரு பதிகம் பாடினார் என்பதறிகிறோம். அப்பதிகம் நமக்குக் கிட்டவில்லை. பொன்திரளைக் கரை ஏற்றி ஆட்கள் மூலம் பரவையார் இல்லத்திற்கு அனுப்பிவிட்டுத் திருவீதியினில் நின்றவாறே திருமூலட்டானத்தாரை வணங்கினார்.பொன்செய்த மேனியினீர் என்ற பதிகம் திருமுதுகுன்றத்து ஈசரைப் போற்றுவதாக அமைந்துள்ளதால், அதனை அத்தலத்துப் பதிகமாகப் பதிப்பித்துள்ளனர். ஆனால், அப்பதிகமோ திருவாரூரில் பாடப்பெற்றது என்பதோடு குளத்தில் இடுப்பளவு நீரில் நின்றவாறு பாடியது என்ற ஒரு தனிச்சிறப்புடையதாகும்.திருமுதுகுன்றத்தில், சுந்தரர் பொன்னை ஆற்றிலிடும்போது என்னை வலிய ஆட்கொண்ட அருளினை இதன்மூலம் அறிவேன் எனக் கூறியதன் காரணம் தன்னுடைய பக்திமை, தோழமை பாடுகின்ற பதிகங்கள் ஆகியவை ஐயத்திற்கு இடமின்றி பூரணமாக உள்ளதா என்பதில் அவருக்கு ஐயப்பாடு உண்டாயிற்று. அதனால்தான் பொன்னிலிருந்து மச்சம் வெட்டிக்கொண்டார். திருவாரூரில் அதனைச் சோதித்தார். முதலில், மாற்றைக் குறைத்துக் காட்டி சுந்தரரைச் சோதித்த பெருமான் பின்பு குறையாத மாற்றுடைய பொன்னே என்பதைக் காட்டி அருளினார். தன்னை வலிய ஆட்கொண்ட திறம் உணர்ந்தார். நம்பி ஆரூரர் பொன்னை உரைத்து தன் பக்திமையையும், தமிழையும் உரைத்துக்கொண்டதுதான் உண்மை.தொகுப்பு: முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi