பொன்னேரி, மே 27: பொன்னேரி நகராட்சியில் பழுதடைந்த சாலையை சீரமைக்க ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை எம்எல்ஏ துரை சந்திரசேகர் நேரில் சென்று ஆய்வு செய்தார். பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட என்.ஜி.ஓ.நகரில் 19, 20, 25 வார்டுகளில் கடந்த 22 ஆண்டு காலமாக சீரமைக்கப்படாமல் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படு இருந்தது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் சாலையை சீரமைத்து தரும்படி பொன்னேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகரை சந்தித்து கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று எம்எல்ஏ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களை நேரில் சந்தித்து, பொன்னேரி மக்களின் நிலையை எடுத்துரைத்து சாலையை சீரமைத்து தரும்படி வேண்டுகோள் வைத்தார்.
அதனை ஏற்று புதிய சிமெண்ட் சாலை அமைப்பதற்கு சுமார் 70 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு சாலை அமைக்கும் பணி கடந்த இரு மாதங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சாலையை சட்டமன்ற உறுப்பினர் நேரில் சென்று நேற்றுமுன்தினம் ஆய்வு மேற்கொண்டு மிக விரைவாக சாலை அமைக்கும்படி உத்தரவிட்டார். அப்போது நகராட்சி வார்டு உறுப்பினர்கள் நல்லசிவம், ராஜேஷ், ஆனந்தன் ஆகியோர் உடன் இருந்தனர். பொதுமக்கள் முதலமைச்சர், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்தனர்.