பொன்னமராவதி, ஆக.18: பொன்னமராவதியில் நேற்று மாலை அரைமணிநேரம் வெளுத்து வாங்கிய மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.பொன்னமராவதி ஒன்றிய பகுதிகள் பெரும்பாலும் வானம் பார்த்த பூமியாகவே உள்ளது. எப்பொழுதுமே மழையை நம்பியே விவசாயம் செய்ய கூடிய பொன்னமராவதி பகுதியில் கடந்த 2 நாட்களாகவே கடுமையான வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதனால் வெயிலின் தாக்கத்தால் மக்கள் நடமாட்டம் மிகக்குறைவாக காணப்பட்ட நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழையானது மாலை 3.30 மணிவரை சுமார் அரைமணிநேரம் இடி மின்னலுடன் மழைபெய்தது. அப்போது இடையாத்தூர், இந்திராநகர், பால்ராஜ் மனைவி பழனியாயி என்பவரது வீட்டில் வேப்பமரம் விழுந்து சேதமானது. இதனால் கிராம பகுதியில் நிலக்கடலை விவசாயம் செய்த விவசாயிகளுக்கு இந்த மழை போதுமானதாக இருக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.