பொன்னமராவதி, செப்.1: பொன்னமராவதியின் முக்கிய வர்த்தக பகுதியான அண்ணா சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள சாலை பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் பதிக்கும் பணி கடந்த நான்கு மாதங்களாக நடைபெற்று வருவதை கண்டித்தும் ஜூலை 18 ம் தேதி நடைபெற்ற சமாதான கூட்ட நடவடிக்கையில் அதிகாரிகள் கூறியபடி உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும்,வர்த்தகர்கள் பொதுமக்களுக்கு பெரும் உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும் புழுதி மண் சாலையை போர்க்கால அடிப்படையில் செப்பனிட்டு தர வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையம் முன் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் பாண்டியன் தலைமை வகித்தார். கட்சியின் ஒன்றிய செயலாளர் பக்ருதீன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராமசாமி, நல்லதம்பி, குமார் , மதியரசி,வாலிபர் சங்க ராஜ்குமார்,லதா, ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஒன்றியகுழு உறுப்பினர்கள் சாத்தையா, சௌந்தரராஜன் மற்றும் பிச்சையம்மாள்,மணிமாறன்,சுந்தரராஜன், திராவிடர் கழக ஒன்றிய தலைவர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.