சிவகாசி, ஆக.31: சிவகாசி பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள பொத்துமரத்து ஊருணி கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் கிடந்தது. கடந்தாண்டு மே மாதம் ஊருணி துார்வாரும் பணி துவங்கியது. பொத்துமரத்து ஊருணியில் 40 சதவீதம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடுகள், வணிக நிறுவனங்கள் கட்டப்பட்டு இருந்தது. சில ஆக்கிரமிப்புகளை வருவாய்துறையினர் அகற்றினர்.
ஊருணியை சுற்றி வசித்த 43 குடும்பங்களுக்கு பட்டா வழங்க மாநகராட்சி நிர்வாகம் வருவாய்துறையினருக்கு பரிந்துரை செய்தது. இந்நிலையில் ஊருணியை சுற்றி வசிக்கும் ஏராளமான குடும்பங்கள் நேற்று தாலுகா அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவில், தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே பட்டா வழங்க வேண்டும் என்றும் வேறு இடத்தில் பட்டா கொடுத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.