Monday, May 29, 2023
Home » பொது கழிவறையை கண்டு அஞ்ச வேண்டாம்!

பொது கழிவறையை கண்டு அஞ்ச வேண்டாம்!

by kannappan

நன்றி குங்குமம் தோழிவெளியூர் செல்ல வேண்டுமோ அல்லது காரில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டுமா… இது போன்ற நீண்ட தூரம் பயணம் செய்யும் போது மட்டுமல்ல, அலுவலகங்கள், சினிமா திரையரங்குகள் மற்றும் மருத்துவமனைக்கு செல்லும் போதும் பெண்கள் கஷ்டப்படும் ஒரே விஷயம் சிறுநீர் கழிப்பதுதான். இவர்கள் இதற்காக அஞ்சுவதற்கு முக்கிய காரணம் சுகாதாரமற்ற கழிவறைகள். இது போன்ற கழிவறைகளை பயன்படுத்தும் போது பெண்கள் பல தொற்று நோய்க்கு ஆளாகின்றனர்.இதற்கு பயந்து பல பெண்கள் இயற்கை உபாதையை கட்டுப்படுத்திக் கொண்டு அதனால் பல அவதிகளை சந்தித்து வந்துள்ளனர். ‘‘இதே பிரச்னையை தான் நானும் சந்தித்தேன்’’ என்கிறார் பெங்களூரில் வசித்து வரும் ஷுபாங்கி. இவர் பெண்கள் சிரமமில்லாமல் இயற்கை உபாதையை கழிக்க ‘PeeEasy’ என்ற கருவியை அறிமுகம் செய்துள்ளார்.‘‘நான் அப்போது கர்ப்பம் தரித்து இருந்தேன். ஸ்கேன், செக்கப்ன்னு பல முறை மருத்துவமனைக்கு செல்ல வேண்டி இருந்தது. சில சமயம் ஸ்கேன் செய்யும் போது நிறைய தண்ணீர் குடிக்க சொல்வாங்க. அதனால் ஸ்கேன் முடித்த பிறகு நம்மால் சிறுநீர் கழிக்காமல் இருக்க முடியாது. மேலும் கர்ப்பமாக இருந்ததால் மிகவும் அசவுகரியமாக இருக்கும். மருத்துவமனையில் இருக்கும் கழிவறைகள் பற்றி எல்லாருக்கும் தெரியும். மருத்துவமனை நடைவழிப் பாதையை சரியாக வைத்து இருப்பார்கள். ஆனால் கழிவறைகளை சரியாக சுத்தம் செய்திருக்கமாட்டார்கள்.அந்த சமயத்தில் கழிவறையில் அமர்ந்து எழ முடியாமலும் தவித்து இருக்கேன். மேலும் சமயத்தில் தொற்று நோய் பாதிப்பு அதிகம் இருக்கும். இதனாலும் நான் அவதிப்பட்டு இருக்கேன். என்னுடைய சிக்கலை குடும்பத்தினரிடம் சொன்ன போதுதான் தெரிந்தது, என்னைப் போல் பலரும் இதே பிரச்னையை சந்தித்துள்ளனர் என்பது. பொது கழிவறைகளை பயன்படுத்த பயந்து இயற்கை உபாதையை கட்டுப்படுத்திக்கொண்டு அவதிப்பட்டுள்ளனர் என்பது தெரிந்தது.சரியாக தண்ணீர் குடிக்காமல், சிறுநீரை அடக்குவதால், சுமார் 50-60% பெண்கள் Urinary Tract Infection எனப்படும் சிறுநீர் பாதை தொற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். இது கருப்பையில் வீக்கம், எரிச்சல் மற்றும் அசௌகரியங்களை ஏற்படுத்தும். மேலும் சுகாதாரமற்ற பொது கழிப்பறைகளில் பெண்கள் சில நேரம் உட்கார்ந்தாலே, பாக்டீரியா நோயால் பாதிக்கப்படுகின்றனர். தொற்று நோய் ஒரு புறம் இருக்க, கர்ப்பம் தரித்த பெண்கள், வயதான பெண்கள், உடல்நலக் குறைவால் அவதிப்படும் பெண்கள் எனப் பலரால் உட்கார்ந்து எழுந்து சிறுநீர் கழிப்பது என்பது நடக்காத காரியம்’’ என்ற ஷுபாங்கி இதற்கு ஒரு தீர்வு காண அதற்கான ஆராய்ச்சியில் இறங்கியுள்ளார்.‘‘கழிவறைகளில் அமர்ந்து எழுவது முடியாத போது, அதற்கு ஒரே தீர்வு நின்றபடியே கழிவறையை பயன்படுத்துவதுதான் என்று தோன்றியது. பெண்களால் அது சாத்தியமா என்று அதற்கான ஆய்வில் இறங்கினேன். ஐம்பதிற்கும் மேற்பட்ட மருத்துவர்களிடம் இது குறித்து பேசினேன். அவர்களை சந்தித்த போதுதான், இந்த பிரச்சனை கர்ப்பமாகியிருக்கும் பெண்கள் மட்டும் இல்லாமல், புற்றுநோய், கீழ்வாதம் மற்றும் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டவருக்கும் தலையாய பிரச்சனையாக இருப்பது தெரிய வந்தது.வயதான பெண்கள் கூட, இரவு நேரத்தில் கழிவறைக்குச் செல்ல முடியாமல், பக்கெட்டுகளை தங்கள் படுக்கைக்கு அருகில் வைத்து அதைப் பயன்படுத்துவது தெரிய வந்தது. இதற்கான தீர்வாக பெண்கள் நின்றபடியே சிறுநீர் கழிக்க சில கருவிகள் சந்தையில் விற்பனையில் உள்ளது. சிலிக்கானில் தயாரிக்கப்பட்ட அந்த கருவியை நாம் ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகு சுத்தம் செய்ய வேண்டும்.சரியாக சுத்தம் செய்யாவிட்டால், அதன் மூலம் வேறு விதமான பிரச்னைகள் ஏற்படும். எல்லாவற்றையும் விட இதை எல்லா இடங்களுக்கும் எடுத்து செல்ல முடியாது. அப்படியே எடுத்து சென்றாலும் அங்கு அதனை சுத்தம் செய்வது என்பது நடைமுறைக்கு சாத்தியமாகாது. பெண்கள் எளிதாகவும் அதே சமயம் சுகாதார முறையிலும் பயன்படுத்த வேண்டும். எல்லாவற்றையும் விட எங்கும் எடுத்து செல்ல சுலபமாக இருக்க வேண்டும். அவர்களின் கைப்பையிலோ அல்லது ஜீன்ஸ் பேக்கெட்டிலோ பொருந்தும்படியாக இருக்கணும் என்பதில் கவனமாக இருந்தேன்’’ என்றவர் இந்தாண்டு மே மாதம் ‘Pee Easy’யை அறிமுகம் செய்துள்ளார்.‘‘சிறுநீர் கழிக்க பயன்படுத்தக்கூடிய கருவி என்பதால், அதனால் பெண்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். அதனாலேயே எளிதில் மக்கக்கூடிய பொருளைக் ெகாண்டு இதனை வடிவமைத்திருக்கிறேன். இதனை பேக்ெகட்டில் மடித்து வைத்துக் கொள்ள முடியும் என்பதால் பெண்கள் எங்கும் சிரமமில்லாமல் எடுத்துச் செல்லலாம். ஒரு பேக்கெட்டில் பத்து கருவிகள் இருக்கும். இதன் விலை ரூ.99 மட்டுமே. உடல்நிலை சரியில்லாதவர்கள், வயதானவர்கள் மற்றும் அடிக்கடி வெளியில் பயணம் செய்யும் பெண்கள் என யார் வேண்டும் என்றாலும் பயன்படுத்தலாம்’’ என்ற ஷுபாங்கி, ஐ.டி வேலையை துறந்து முழுமையாக இதில் கவனம் செலுத்த துவங்கிவிட்டார்.‘‘தற்போது பெங்களூரில் உள்ள மருத்துவமனைகளில் ‘‘Pee Easy’’யை மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் பெங்களூரில் பல இடங்களிலும், Pee Easy இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. பெண்கள் அதில் பத்து ரூபாயை செலுத்தி, சுலபமாக பெற்றுக்கொள்ளலாம். இளம் பெண்கள் பலர் இதைப் பயன்படுத்த தயங்குவதில்லை.ஒரு முறையாவது பயன்படுத்தி பார்க்கலாமே என்றுதான் அவர்கள் நினைக்கின்றனர். ஆனால் வயதான பெண்கள் இதைப் பயன்படுத்துவதில் தயக்கம் காட்டுகின்றனர். பயன்படுத்துவது சுலபம். புனல் போல் இருக்கும் இந்த கருவியை பெண்கள் சிறுநீர் கழிக்கும் இடத்தில் பொருத்திக் கொண்டால் போதும். நின்று கொண்ேட கழிவறையில் சிறுநீர் கழிக்கலாம்.ஒரு முறை பயன்படுத்தியதை மறுபடியும் பயன்படுத்த முடியாது என்பதால், வெளியூர் மற்றும் மருத்துவமனையில் உள்ள பெண்களுக்கு இது மிகவும் வசதியானது. இது பெண்களின் ஆரோக்கியத்தை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட கருவிதான். ஃபேஷன் உபகரணம் கிடையாது. அதனால்அனைவரும் தயங்காமல் பயன்படுத்தலாம். Flipkart, Amazon போன்ற ஆன்லைன் ஷாப்பிங்கிலும் கிடைக்கிறது’’ என்றார் ஷுபாங்கி.ஸ்வேதா கண்ணன்

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi