கோவை: கோவை சாய்பாபா காலனி போலீசார் பிஎன் புதூர் பகுதியில் நேற்றுமுன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள ஒரு பெட்டி கடை முன் ஒருவர் பொதுமக்களுக்கு இடையூறாக புகை பிடித்து கொண்டு இருந்தார். இதனை பார்த்த போலீசார் அவரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில் அவர், வடவள்ளியை சேர்ந்த ஜெகன் (42) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர் மீது பொது இடத்தில் புகை பிடித்தல் தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதேபோல், சாய்பாபா காலனி போலீசார் என்எஸ்ஆர் ரோட்டில் உள்ள பெட்டி கடை முன்பு புகைப்பிடித்து கொண்டு இருந்த சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஆண்டியப்பன் (67) மற்றும் வேலாண்டிபாளையம் பகுதியில் மளிகை கடை முன் புகைப்பிடித்த வேலாண்டிபாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் (62) ஆகியோரையும் கைது செய்தனர்.