கரூர், ஆக. 26: அரசு காலனி நெரூர் பிரிவு வாங்கல் சந்திப்பில் ரூ.80 லட்சத்தில் விரைவில் ரவுண்டானா பணி நடைபெற உள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைக்கு நிகராக நெடுஞ்சாலைத்துறைகளின் பயன்பாடு அதிகரிக்கவும், அதன் உள் கட்டமைப்பு வசதியை மேம்படுத்தவும் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனடிப்படையில் கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி, கரூர் அரசு காலணி வாங்கல் பெரிய சாலையில் ரவுண்டானா அமைப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான முக்கிய காரணம் என்னவென்றால், கடந்த சில ஆண்டுகளாக குறிப்பாக கரூர் முதல் மோகனூர் வரை நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலை மேம்படுத்தி போக்குவரத்து மேம்படுத்தியதால் அதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.குறிப்பாக கரூர் பகுதியை சுற்றியுள்ள நெரூர், வேடிச்சி பாளையம், பஞ்சமாதேவி, மின்னாம்பள்ளி, சோமுர், கோயம்பள்ளி, அச்சம் புதூர், வாங்கல் குப்பிச்சிபாளையம் மோகனூர், நாமக்கல் சேலம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் இந்த பாதையை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் கரூரில் உள்ள ஏராளமான ஏற்றுமதி மற்றும் ஜவுளி நிறுவனங்களுக்கு வேலை செய்வதற்காகவும் மற்றும் தினசரி வழக்கமான பணிகள் மேற்கொள்வதற்காகவும் பொதுமக்கள், விவசாயிகள் டிராக்டர், நான்கு சக்கர வாகனம், இருசக்கர வாகனங்களில் செல்வதால் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக நெரூர் வாங்கல் பிரிவு சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.இதை தடுக்கும் வகையில், ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு ரவுண்டானா மற்றும் சாலை மேம்பாட்டு பணிகள் விரைவில் நடைபெற உள்ளது.
இதற்கான ஆய்வு பணிகளை நெடுஞ்சாலைத்துறை சென்னை சாலை பாதுகாப்பு கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன், திருப்பூர் சாலை பாதுகாப்பு கோட்டப் பொறியாளர் முருக பூபதி, கரூர் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர் ரவிக்குமார் கரூர் உதவி கோட்டபொறி யாளர் தமிழ்ச்செல்வன், உதவி பொறியாளர் கர்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.