திருவண்ணாமலை, ஜூலை 9: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று நடந்தது. அதில், டிஆர்ஓ பிரியதர்ஷினி, ஆர்டிஓ மந்தாகினி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சிவா உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், சுய தொழில் கடனுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 382 பேர் மனு அளித்தனர்.
பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகளை முறையாக எழுதி வசதியாக, அரசு அலுவலர்கள் மூலம் மனுக்கள் எழுதித்தர கலெக்டர் ஏற்பாடு செய்துள்ளார். அதன்படி, கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில், 25க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள், பொதுமக்களுக்கு மனுக்களை எழுதி உதவி செய்தனர். மேலும், மனுக்கள் எழுதும் இடம் மற்றும் மனுக்கள் அளிக்கும் இடங்களில், பொதுமக்கள் வரிசையில் நிற்பதை தவிர்த்து இருக்கையில் அமரும் வசதியை கலெக்டர் ஏற்படுத்தியுள்ளார். அதனை, கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டார். இந்நிலையில், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை துறைவாரியாக பெறுவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மனுக்களை படித்து பார்த்து, உரிய பதில்களுடன் கலெக்டரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்மூலம், மனுக்களுக்கு தீர்வு காண்பது எளிதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது அதிகபட்சம் 15 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மனுக்களை தள்ளுபடி செய்தால், அதற்கான காரணத்தை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என்றார். அதைத்தொடர்ந்து, குறைதீர்வு முகாமில் மனுக்கள் அளித்த மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்களை தரை தளத்துக்கு நேரில் சென்று கலெக்டர் பெற்றுக்கொண்டார். அவர்களுக்கு உடனடியாக நலத்திட்ட உதவிகள் மற்றும் உதவி உபகரணங்கள் வழங்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், போளூர் தாலுகா செங்குணம் கிராமத்தில், குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்கும் பணி நடந்து வருவதாகவும், அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கிராம மக்கள் மனு அளித்தனர். மேலும், செல்போன் டவர் அமையும் பகுதியில் பள்ளி அமைந்திருக்கிறது. டவர் மீது நூற்றுக்கணக்கான குரங்குகள் குவியத்தொடங்கியுள்ளன. எனவே, பள்ளி மாணவர்களுக்கு அதனால் பெரிதும் பாதிப்பு ஏற்படும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், குறைதீர்வு கூட்டத்தில் தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்களை தடுக்க, கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பொதுமக்கள் கொண்டுசென்ற பை உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் சோதனை செய்தபிறகே அனுமதித்தனர்.