திருவெறும்பூர், செப்.2: திருவெறும்பூர் பகுதி பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த கக்கன் காலனி அரசு மதுபான கடை பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று மூடப்பட்டது. இதனால் தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். திருவெறும்பூர் கக்கன் காலனியில் உள்ள அரசு மதுபான கடை பொதுமக்களுக்கும், அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கும் பெரும் இடையூறாக இருந்து வந்தது.
இதனால் நீண்ட நாட்களாக பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்த நிலையில் சம்மந்தப்பட்ட அரசு மதுபான கடையை மூட வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும், பக்தர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் பல்வேறு கட்ட போராட்டங்களையும் அறிவித்து வந்தனர். இந்நிலையில் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் கக்கன் காலனி அரசு மதுபான கடை மூடப்படும் என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று அதிரடியாக அந்த கடை மூடப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும் பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.