பேராவூரணி/பட்டுக்கோட்டை, செப். 13: அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் உள்ளாட்சி பிரதிநிதிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி,சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களில் 6 இடங்களில் புதிய அரசு கட்டடங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சிகளுக்கு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் முன்னிலை வகித்தார்.
சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கங்காதாரபுரம் ஊராட்சியில் ரூ.13.37 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடமும், குப்பத்தேவன் ஊராட்சியில் ரூ.14.08 லட்சம் மதிப்பீட்டில் உணவு தானிய சேமிப்புக் கிடங்கு கட்டிடமும்,
பேராவூரணி ஒன்றியம், ஒட்டங்காடு ஊராட்சியில் ரூ. 10.19 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடமும், திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் ரூ. 26 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிதாக இரண்டு வகுப்பறை கட்டிடம், பூவாளூர் ஊராட்சியில் ரூ. 13.65 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் உள்ளிட்ட 6 புதிய கட்டிடங்களை பயன்பாட்டிற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.இதேபோல், பட்டுகோட்டை ஊராட்சி ஒன்றியம், பண்ணவயல் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.10.19 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம், பெண்களுக்கான கட்டணம் இல்லா பேருந்து பயண திட்டம், பெண் குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதற்காக அரசு பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்லும் பெண் பிள்ளைகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம், வரும் 15ம் தேதி தொடங்கப்பட உள்ள கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என மக்கள் பயன்பெற பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் உள்ளாட்சி பிரதிநிதிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அனைவரையும் பயனடைய செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் எம்எல்ஏ துரை சந்திரசேகர் (திருவையாறு), மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, ஒன்றியக் குழுத் தலைவர்கள் முத்துமாணிக்கம் (சேதுபாவாசத்திரம்), சசிகலா ரவிசங்கர் (பேராவூரணி) ஆர்டிஓ அக்பர் அலி (பட்டுக்கோட்டை) கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) காந்த், தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பட்டுக்கோட்டை எம்.எல்.ஏவுமான அண்ணாதுரை, பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பழனிவேல், துணைத்தலைவர் முருகானந்தம், பண்ணவயல் முன்னாள் ஊராட்சித் தலைவர் ராஜாதம்பி, பட்டுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாமிநாதன், கோவிந்தராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.