கமுதி, ஜூலை 19: கமுதி அருகே வாழவந்தாள்புரம் கிராமத்தில் உள்ள வாழவந்தம்மன் கோயில் வருடாந்திர ஆடி பொங்கல் உற்சவ விழாவை நடக்கிறது. விழாவை முன்னிட்டு பொந்தம்புளி கிராமத்திலிருந்து அம்மன் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் செல்ல, அதன் பின்னால் பக்தர்கள் அக்னி சட்டி, முளைப்பாரி சுமந்து, இசை வாத்தியங்களுடன் ஊர்வலமாக சென்று அம்மன் கோயிலை சுற்றி வந்து முளைப்பாரியை இறக்கி வைத்து வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து ஏராளமான பெண்கள் கோயில் முன்பாக பொங்கல் வைத்து அம்மனுக்கு படையல் இட்டு வழிபட்டனர். இதில் வாழவந்தாள்புரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டுச் சென்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.