மேட்டுப்பாளையம், ஆக.30: காரமடையை அடுத்துள்ள கணுவாய்பாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (74). இவர் பொகளூர் பகுதியில் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு மனைவியும், கனகராஜ் என்ற மகனும் உள்ளனர். கனகராஜ் தமிழ்நாடு மின்வாரியத்தில் உதவி மேற்பார்வை பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். ரங்கசாமி நேற்று மாலை பொகளூர் அருகே தனது பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த சரக்கு வாகனமும், ரங்கசாமியின் பைக்கும் மோதின.
இதில் ரங்கசாமி படுகாயமடைந்தார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.