குளச்சல், ஆக. 23: மணவாளக்குறிச்சி பாபுஜி தெரு கலைஞர் காலனியை சேர்ந்தவர் ஐயப்பன் (74). கட்டிட தொழிலாளி. இவர் நடந்த 20ம் தேதி மணவாளக்குறிச்சி அரசு தொடக்கப்பள்ளி அருகில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றார். பின் அங்கிருந்து வெளியே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மணவாளக்குறிச்சி பாலத்திலிருந்து சந்திப்பு நோக்கி வேகமாக சென்ற பைக், ஐயப்பன் மீது மோதியது. இதில் ஐயப்பன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அப்பகுதியினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ஐயப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் சுதாகர் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் விபத்து ஏற்படுத்திய பைக்கை ஓட்டி வந்த கடியபட்டணம் பாத்திமா தெருவை சேர்ந்த சகாய தினேஷ் (32) மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.