வந்தவாசி, செப்.3: வந்தவாசி அடுத்த பொன்னூர் மலை அடிவாரத்தில் பைக் மீது பஸ் மோதியதில் அரசு பஸ் டிரைவர் பரிதாபமாக பலியானார். குழந்தை பிறந்த 4வது நாளில் நடந்த சம்பவத்தால் அப்பகுதியினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வீரம்பாக்கம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன்(38). செய்யாறு நெடுஞ்சாலையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பொம்மிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பாக மேல்மருவத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 3வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. மனைவி மருத்துவமனையில் உள்ளதால் ஏற்கனவே உள்ள 2 பெண் குழந்தைகள் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அடுத்த ஞான உதயம் கிராமத்தில் உள்ள பொம்மியின் தாய் வீட்டில் உள்ளனர்.
இந்நிலையில் குழந்தைகளை பார்க்க பாஸ்கரன் நேற்று முன்தினம் இரவு தனது பைக்கில் ஞான உதயம் கிராமத்திற்கு செல்ல வந்தவாசி சேத்துப்பட்டு நெடுஞ்சாலை பொன்னூர் மலை அடிவாரம் அருகே சென்று கொண்டிருந்தபோது திருவண்ணாமலையில் இருந்து வந்தவாசி நோக்கி வந்த அரசு பஸ் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியானார். பின்னர், சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்தவாசி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராம்குமார் ஏகாம்பரம் மற்றும் போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாஸ்கரனின் தாய் வனிதா நேற்று வடக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை பிறந்த 4வது நாளில் தந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.