ஒடுகத்தூர், ஜூன் 7: வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த நேமந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குப்பம்மாள்(56). இவரது மகன் சவுந்தரராஜன்(28) சென்னையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பூர்ணிமா. இவருக்கும், மாமியார் குப்பம்மாளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல், நேற்று முன்தினம் இரவு அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே பூர்ணிமா கணவர் சவுந்தரராஜனுக்கு போன் செய்து, உனது தாயார் என்னிடம் வீணாக சண்டை போடுகிறார்கள், நீங்கள் வந்து கேளுங்கள் என கூறினாராம்.
இதை கேட்டு ஆத்திரமடைந்த சவுந்தரராஜன் சென்னையில் இருந்து நேற்று அதிகாலை 2 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர், வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த தாயார் குப்பம்மாவை தட்டி எழுப்பி, தான் வைத்திருந்த பைக் சாவியால் உடல் முழுவதும் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதனால் துடிதுடித்த அவரது சத்தம் கேட்டு எழுந்து வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.