செய்யாறு, ஆக.30: செய்யாறு அருகே வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்கை மர்ம ஆசாமிகள் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரம் மற்றும் வெம்பாக்கம் தாலுகா பகுதிகளில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக பட்டப்பகலிலும், இரவிலும் பைக்குகள் கண்ணிமைக்கும் நேரத்தில் திருட்டுபோய் வருகிறது. பைக்கை பறி கொடுத்தவர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் புகார் அளித்த நிலையில் போலீசாரும் தீவிரமாக கண்காணித்து வந்தனர். தொடர்ந்து, இம்மாதம் முதல் வாரத்தில் 2 பைக் திருடர்களை பிடித்து விசாரித்ததில், அவர்களிடமிருந்து 6 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவர் மாங்கால் கூட்ரோட்டில் உள்ள தனியார் கம்பனியில் பணியாற்றி வருகிறார். இவர் காஞ்சிபுரம்- வந்தவாசி சாலையில் மாத்தூர் கிராம கூட்ரோடு எதிரே உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். சமீபத்தில் இவர் வழக்கம்போல தனது வீட்டின் வராண்டாவில் ைபக்ைக நிறுத்திவிட்டு உறங்கச் சென்றுள்ளார். விடிந்ததும் தனது பைக் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தில் தேடியபோது வீட்டின் அருகில் தனது பைக் கிடப்பதை கண்டெடுத்துள்ளார். இதையடுத்து, அந்த கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, விடியற்காலையில் 2 இளைஞர்கள் சாலை ஓரம் நின்று, வீட்டினை நீண்ட நேரமாக நோட்டமிட்டு விட்டு உள்ளே வந்து பைக்கை திருடிச்செல்ல அதன் சைடுலாக்கை உடைக்க முயற்சிக்கின்றனர். முடியாததால் முன்பக்க வீலை பிடித்து தூக்கியவாறு இருவரும் சேர்ந்து வெளியே தூக்கிச்செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. வீட்டிலிருந்து சிறிது தூரம் தூக்கிச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து பைக்கின் சைடுலாக் உடைக்க முயற்சித்து முடியாமல் போகவே அங்கேயே போட்டுவிட்டு சென்றுள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 24 மணி நேரமும் போக்குவரத்து நிறைந்து காணப்படும் சாலையின் அருகிலேயே உள்ள வீட்டில் நிகழ்ந்துள்ள பைக் திருட்டு சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, போலீசார் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.