விக்கிரவாண்டி, செப். 12: விக்கிரவாண்டி அருகே இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 2 பவுன் தங்க சங்கிலி மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாத்தனூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (42). இவர் நேற்று விக்கிரவாண்டி பேருந்து நிலையம் அருகே உள்ள இந்தியன் வங்கிக்கு அவரது மகளுடன் வந்தார். தொடர்ந்து அவர் வைத்திருந்த 2 பவுன் நகையை வங்கியில் வைத்து பணம் பெறுவதற்காக முயன்ற போது ஆதார் கார்டு இல்லாததால் எடுத்து வருமாறு ஊழியர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து அவர், தனது மகள் வங்கிக்கணக்கில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை வங்கியில் இருந்து எடுத்து கொண்டு பெட்டியில் நகை மற்றும் பணத்தை வைத்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டனர். பின்னர் அப்பகுதியில் உள்ள தேநீர் கடையில் கணேசன், தனது மகளுடன் சேர்ந்து தேநீர் அருந்தியுள்ளார். தேநீர் குடித்துவிட்டு வீடு திரும்பிய அவர், பெட்டியை திறந்து பார்த்த போது அதில் நகை, பணம் திருடு போயிருப்பது தெரியவந்தது. இகுறித்து கணேசன் விக்கிரவாண்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் பைக்கில் வந்து பைக் பெட்டியை திறந்து நகை, பணம் திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி மர்ம நபரை தேடி வருகின்றனர்.