சின்னசேலம், ஜூன் 10: சின்னசேலம் அருகே பைக்கில் தம்பதிபோல் வந்தவர்கள் ஆடு மேய்த்த மூதாட்டியிடம் வழி கேட்பதுபோல் நடித்து, அவரை தாக்கி ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள தாலி செயினை பறித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் பவர் ஆப்ஸ் அருகில் தீர்த்தாபுரம் காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் மனைவி பெரியம்மாள் (65). இவர்களுக்கு செந்தில்குமார் என்ற மகனும், புஷ்பா என்ற மருமகளும் உள்ளனர். மேலும் 2 பேரக்குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக செந்தில்குமார் பெங்களூரில் தங்கி வேலை செய்து வருகிறார். அதனால் பெரியம்மாள் தனது கணவர், மருமகள், பேரப்பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.
மேலும் பெரியம்மாள் 5 மாடு, 10 ஆடுகள் வளர்த்து வருகிறார். அவைகளை காலையில் இருந்து மாலை வரை பெரியம்மாள் மேய்த்து வருவது வழக்கம். அதைப்போல நேற்று முன்தினம் காலை பெரியம்மாள் வழக்கம்போல ஆடு, மாடுகளை மேய்த்து வீட்டுக்கு மாலை 5.45 மணியளவில் ஓட்டி வந்துள்ளார். அப்போது அவ்வழியே பைக்கில் தம்பதிபோல் வந்த ஒரு ஆண், ஒரு பெண் ஆகிய இருவரும் அந்த மூதாட்டியிடம் கள்ளக்குறிச்சி செல்ல வழி கேட்பதுபோல் அருகில் வந்துள்ளனர்.
அப்போது வழி சொன்னபோது, திடீரென்று அந்த ஆண் பெரியம்மாளை கழுத்தை பிடித்து கீழே தள்ளி, அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தாலி செயின், அரை பவுன் தோடு என ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள நகைகளை பறித்து சென்றுள்ளனர். இதனால் பெரியம்மாளின் காது, கழுத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். பின்னர் நடந்த சம்பவம் குறித்து பெரியம்மாள், சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.