ஊட்டி, பிப்.22: பைக்காரா நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் நிலையில் இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலான மக்கள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா, பைக்காரா அணை மற்றும் நீர்வீழ்ச்சி போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர். இதில், பைக்காரா நீர் வீழ்ச்சி மற்றும் அணை ஆகிய இரு சுற்றுலா தலங்களும் ஊட்டி – கூடலூர் சாலையில் ஓரத்தில் அமைந்துள்ளது. இதனால், கர்நாடகம் மாநிலம் மற்றும் கேரள மாநிலங்களில் இருந்து கூடலூர் வழியாக வரும் சுற்றுலா பயணிகள் பைக்காரா படகு இல்லம் மற்றும் நீர் வீழ்ச்சிக்கு செல்கின்றனர்.
இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள அணையில் படகு சவாரி மேற்கொள்கின்றனர். மேலும், நீர் வீழ்ச்சிக்கு சென்று, இயற்கை அழகை கண்டு ரசிப்பதுடன் அங்கு புகைப்படம் எடுத்து மகிழ்வது வழக்கம். பொதுவாக தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை இப்பகுதியில் மழை கொட்டும் நிலையில், பைக்காரா அணை முழு கொள்ளளவை எட்டும். அப்போது, அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் நிலையில், நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதனை அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். ஆனால், மற்ற சமயங்களில் நீர் வீழ்ச்சியில் தண்ணீர் இருக்காது.
பைக்காரா நுண் மின் நிலையம் இயக்கினால் மட்டுமே நீர் வீழ்ச்சியில் தண்ணீர் இருக்கும். இந்நிலையில், கோடை சீசன் நெருங்கிய நிலையில், தற்போது சமவெளிப் பகுதிகளில் மின் தேவை அதிகரித்துள்ளது. இந்த பைக்காரா மின் நிலையம் நாள்தோறும் பகல் நேரங்களிலும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், மின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் தற்போது பைக்காரா நீர் வீழ்ச்சியில் கொட்டுகிறது. இதனால், அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் நீர் வீழ்ச்சியை கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி, புகைப்படங்களையும் எடுத்துச் செல்கின்றனர்.