Wednesday, April 17, 2024
Home » பேலியோ பாதி… வீகன் மீதி…

பேலியோ பாதி… வீகன் மீதி…

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர்டிரெண்டாகும் பேகன் டயட்!கற்கால உணவு முறையை அடிப்படையாகக் கொண்ட பேலியோ டயட் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்… வீகன் டயட் பற்றியும் அறிந்திருப்பீர்கள்… உணவில் விலங்கின் இறைச்சி, முட்டை உட்பட அது தரும் பால் பொருட்களைக் கூட தவிர்ப்பது வேகன் டயட். முற்றும் முதலாக சைவம் மட்டுமே.இந்த இரண்டு உணவுமுறையிலுமே நிறை குறைகள் இருப்பது பற்றி பல்வேறு விவாதங்கள் நடந்துவருகின்றன. ஆனாலும், இரண்டு உணவுமுறைகளிலுமே இருக்கும் ஆரோக்கிய அடிப்படையிலான நோக்கங்கள் மிகச்சரியானவை. எனவே, இந்த எதிரெதிர் உணவுமுறையை எப்படி பேலன்ஸ் செய்வது என்ற முயற்சியின் விளைவாக பேகன் டயட்டை உருவாக்கி இருக்கிறார்கள். பேலியோவில் இருக்கும் சிறப்பம்சங்கள், வீகனில் இருக்கும் சிறப்பம்சங்கள் இரண்டையும் பகுத்தாய்ந்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பேகன் டயட் இப்போது சர்வதேச அளவில் டிரெண்டிங்கில் இருக்கிறது. உணவியல் நிபுணர் யசோதாவிடம் இந்த பேகன் டயட் பற்றியும், அதனால் எந்த வகையில் நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றியும் கேட்டோம்…பேலியோ மற்றும் வீகன் டயட்டின் அடிப்படைக் கொள்கைகள் சிலவற்றை எடுத்துக்கொண்டு அதில் புதிதாக சிற்சில மாற்றங்கள் செய்து உருவாக்கப்பட்ட புதிய டயட் முறைதான் பேகன் டயட். கற்கால உணவு வகைகளை அடிப்படையாக கொண்ட பேலியோ டயட் என்பதனை எல்லாராலும் கடைபிடிக்க முடியுமா அல்லது எல்லாருக்கும் அது ஒத்து வருமா என்பது சந்தேகத்துக்குரிய கேள்விதான். கற்கால மனிதன் தன் உணவை தேடித்தேடி வேட்டையாடி உண்டான். மலைகளில் விளைந்த அருமையான காய், கனிகளை சாப்பிட்டான். அவன் சாப்பிடும் இறைச்சிக் கொழுப்பு ஜீரணமாகும் அளவு அவனுக்கு உடல் உழைப்பு இருந்தது. உடல் உழைப்பு குறைந்து விட்ட இந்த காலத்தில் இந்த முறை எத்தனை பயனளிக்கும் என்பது தெரியாது. வெறும் இயற்கை உணவு உட்கொள்ளக்கூடிய வீகன் டயட்டைப் பொறுத்தமட்டில் அசைவ உணவில் கிடைக்கக்கூடிய குறிப்பிட்ட சில தேவையான வைட்டமின்கள் சரி வர கிடைக்காது. உதாரணத்திற்கு, ஒமேகா 3 மற்றும் பி12 போன்ற வைட்டமின்கள் சைவ உணவில் கிடைப்பது அரிதான விஷயம். அதனால் பேலியோ மற்றும் வீகன் ஆகிய இரண்டு டயட் முறைகளை மட்டுமின்றி பல வகையான டயட் உணவு முறைகளை பழகி ஆராய்ந்த மார்க் ஹைமன் என்ற மருத்துவர் அறிமுகப்படுத்தியதுதான் பேகன் டயட். பேகன் டயட்டை பின்பற்றுபவர்கள் காய்கறி, பழங்கள், கொட்டைகள், விதைகள், இறைச்சி, மீன் மற்றும் முட்டை ஆகியவற்றை சாப்பிடலாம். இனிப்பு வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், தானியங்கள், பருப்பு வகைகள், பால் பொருட்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். அதாவது காய்கறி மற்றும் பழங்கள் நம் தினசரி டயட்டில் 75 சதவிகிதம் வரை இடம்பெற வேண்டும். பேலியோ மற்றும் வீகன் இரண்டுமே நம் உடலில் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தாத உணவிற்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. அதுமட்டுமின்றி கார்போஹைட்ரேட் இல்லாத காய்கறிகள் சாப்பிடவே இரண்டு டயட்டுகளும் வலியுறுத்துகின்றன என்பது இங்கே கவனிக்கத்தக்கது. பேகன் டயட்டும் இவ்விரண்டு கொள்கைகளையும் தீவிரமாக வலியுறுத்துகிறது. எனவே, இவ்விரண்டு டயட்டிலும் உள்ள நல்ல அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு மார்க் ஹைமன் ஏற்படுத்திய முறையான டயட்தான் பேகன் டயட்.பேகன் டயட் முறையில் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் சர்க்கரை உணவுகளை தவிர்த்தல்உடலில் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தும் எந்த ஒரு உணவையும் அது எந்த வடிவில் இருந்தாலும் சரி அதனை கட்டாயம் தவிர்த்தல் அவசியம். என்றாவது ஒருநாள் அரிதாக கொண்டாட்டங்களின் போது மிகச்சிறிய அளவில் இனிப்புகளை எடுக்கலாம். ஆனால், அது உங்கள் தினசரி டயட்டில் இருந்து கட்டாயம் நீக்கப்பட வேண்டியது மிக மிக அவசியம். காய்கறி உணவுகள் அதிகமாக எடுக்க வேண்டும்நம் தட்டில் பாதியளவிற்கும் மேல் காய்கறிகளால் நிறைந்திருக்க வேண்டும். காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். ஒரே மாதிரியான காய்கறிகளை சாப்பிடாமல் பல வகையான காய்கறிகளை சாப்பிட வேண்டும். கார்போ ஹைட்ரேட் அதிகமுள்ள கிழங்கு வகைகளை ஒதுக்கிவிடுங்கள். ப்ரென்ச் ஃப்ரைஸை கண்களால் பார்ப்பது கூட பாவம். எப்போதாவது மிகக்குறைந்த அளவில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிடலாம்.பழங்கள் சாப்பிட வேண்டும். பேலியோ டயட் இனிப்பு குறைந்த பழங்களை மட்டும் சாப்பிட வேண்டும் என்கிறது. வீகன் டயட் எல்லா பழங்களையும் சாப்பிடலாம் என்கிறது. ஆனால், பேகன் டயட் இனிப்பு குறைந்த பழங்களை அதிகமாகவும், மற்ற எல்லா விதமான இனிப்பான பழங்களையும் விருந்து போல எப்போதாவதும், உலர்ந்த பழங்களை சாக்லேட் போல மிகக்குறைவாகவும் சாப்பிட வேண்டும் என்கிறது.ரசாயன உணவுகளை தவிர்க்க வேண்டும்ரசாயனம், செயற்கை இனிப்பு மற்றும் நிறமிகள் சேர்க்கப்பட்ட உணவுகள், ப்ரசர்வேட்டிவ்ஸ் சேர்த்த உணவுகள் போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஜங்க் ஃபுட்டை மனதாலும் நினைக்க வேண்டாம். வெளியில் சாப்பிடுவது மட்டுமல்ல இந்த பொருட்களை வீட்டில் செய்து சாப்பிடுவதும் தவறுதான். நல்ல கொழுப்புச்சத்துடைய உணவுகளை உட்கொள்ள வேண்டும்ஒமேகா 3 போன்ற நல்ல கொழுப்புச்சத்து உடைய உணவுகளை உட்கொள்ளலாம். பாதாம் போன்ற நட்ஸ் வகைகள், பூசணி விதை மற்றும் ஃப்ளெக்ஸ் சீட் போன்ற விதை வகைகள், இதயத்திற்கு நன்மை செய்யக்கூடிய ஆலீவ் ஆயில், அவகேடா ஆயில் போன்ற நல்ல கொழுப்புச்சத்துள்ள எண்ணெய்களை உணவில் சேர்க்கலாம். சாப்பிடலாம். மீனில் இருந்து பெறப்படும் கொழுப்பு, முட்டையின் கொழுப்பு, புல்லுண்ணும் விலங்குகளின் இறைச்சி மற்றும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் தேங்காய் எண்ணெய் போன்றவை சாப்பிடலாம்.தவிர்க்க வேண்டிய எண்ணெய்கள்கடுகு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், சோள எண்ணெய் குறிப்பாக சோயா பீன்ஸ் எண்ணெய் போன்ற காய்கறி மற்றும் விதைகளிலிருந்து எடுக்கும் எண்ணெயை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். நல்லெண்ணெயை உணவில் ஓரளவு சேர்த்துக் கொள்ளலாம். பால் பொருட்களை தவிர்க்க வேண்டும்மாட்டின் பாலிலிருந்து தயாரிக்கப்படும் பால் பொருட்கள் அதாவது வெண்ணெய், நெய், சீஸ், யோகர்ட் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இயற்கையாக விளையும் இலை தழைகளை உண்டு வளரும் ஆட்டின் பாலிலிருந்து தயாரிக்கப்படும் பால் பொருட்களை விசேஷங்களின்போது மட்டும் சிறிதளவு எடுத்துக் கொள்ளலாம்.குறைந்த அளவில் இறைச்சிமேடையில் கதாநாயகன் போல தட்டு நிறைய காய்கறிகளும் தட்டின் ஓரத்தில் துணை நடிகர் போல சிறிதளவு இறைச்சியும் இடம் பெற வேண்டும். மெர்க்குரி அற்ற மீன்கள்மீன்கள் சாப்பிடலாம். ஆனால், என்னதான் மீன்கள் உடல்நலத்திற்கு நல்லவை என சொல்லப்பட்டாலும் சில மீன்களில் இருக்கும் மெர்க்குரியானது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. அதனால் மெர்க்குரி அற்ற அல்லது குறைவாக உள்ள மீன்களை உட்கொள்ள வேண்டும். அதற்கு நல்ல சாய்ஸ் சிறிய வகை மீனினங்கள் தான். சின்னச்சின்ன மீன்களை உண்டு வளரும் பெரிய மீன்களில் மெர்க்குரியின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் நெத்திலி, கிழங்கான், கவலை, மத்தி மீன் போன்ற சிறிய வகை மீன்களை சாப்பிடுவது நல்லது. அதுவும் வளர்ப்பு மீனாக இல்லாமல் கடல் மீனாக அல்லது நல்ல தண்ணீரில் வாழும் மீனாக இருக்க வேண்டும். பயறு வகைகளை குறைக்க வேண்டும்பேகன் டயட்டோட ஸ்பெஷாலிட்டியே இறைச்சி கூட சாப்பிடலாம். ஆனால், ஸ்டார்ச் அதிகமுள்ள பருப்பு வகைகள் சாப்பிடக்கூடாது. உதாரணத்திற்கு வேர்க்கடலை. மினரல், நார்ச்சத்து, புரதம் நிறைந்த பயறு வகைகள் சாப்பிடலாம்தான். ஆனால், ஸ்டார்ச் அதிகமுள்ள பீன் வகைகளை சாப்பிடாமல் தவிர்ப்பது உடலுக்கு நல்லது. இந்த வகையான பீன்களை சர்க்கரை நோயாளிகள் அதிகம் உட்கொள்ளும்போது சர்க்கரையின் அளவு அதிகரிக்கக்கூடும். பீன் வகைகள் சிலருக்கு அஜீரணக் கோளாறுகளை ஏற்படுத்தலாம். எனவே, பீன் வகைகளை அளவோடு சாப்பிடுவது நல்லது. க்ளூட்டன் ப்ரீ முழு தானியங்களை சாப்பிட வேண்டும்.க்ளூட்டன் உடலில் சர்க்கரையின் அளவை அதிகரித்துவிடும். தானியங்கள் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தக்கூடியவை. அதனால் கேழ்வரகு, சாமை, திணை, கார் அரிசி, வரகு போன்ற க்ளூட்டன் ஃப்ரீ தானியங்களை அரை கப் அளவில் தினமும் உணவில் சேர்க்கலாம். பேகன் டயட்டின் பலன்பேகன் டயட்டில் அதிக நார்ச்சத்துள்ள காய்கறி மற்றும் பழங்களை அதிகம் எடுத்துக்கொள்வதாலும் கலோரி அதிகரிக்கும் பொருட்களை தவிர்த்து கலோரி குறைவான உணவுகளை சாப்பிடுவதாலும் எடை குறைப்பு சுலபமாகிறது.சொல்வதற்கு சுலபமாக இருந்தாலும் நீங்கள் பால் பொருட்களை அதிகம் விரும்புபவராக இருக்கும் பட்சத்தில் இந்த டயட்டைப் பின்பற்றுவது கொஞ்சம் சிரமமாகக் கூட இருக்கலாம். ஒவ்வொருவருடைய மனநிலை மற்றும் உடல்நிலையை பொறுத்துதான் டயட்டை பின்பற்றுவது குறித்து யோசிக்க வேண்டும். ஒருவருக்கு ஒத்துக்கொள்ளும் உணவுப்பொருள் மற்றவருக்கு ஒத்துக்கொள்ளாது. காரணம் ஒவ்வொரு உயிருக்கும் என்று ஒரு தனித்துவம் உண்டு. எனவே, இந்த டயட் முறை உங்கள் உடலுக்கு ஒத்து வருமா என்பதை உங்களின் உணவியல் நிபுணரை கலந்தாலோசித்தபின் பேகன் டயட்டை பின்பற்றுவதா? வேண்டாமா என்ற முடிவை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்!– சக்தி

You may also like

Leave a Comment

ten − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi