பேரையூர், நவ. 4: இருள் சூழ்ந்து காணப்பட்ட பேரையூர் அரசு மருத்துவமனை வளாகம் தற்போது வெளிச்சத்தில் பிரகாசிக்கிறது. பேரையூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் பல மாதங்களாக மின் விளக்குகள் எரியாமல் போனது. இவற்றை முறையாக சீரமைக்காததால் இருள் சூழ்ந்து காணப்பட்டது. குறிப்பாக அரசு மருத்துவமனை நுழைவுவால் முற்றிலும் இருண்டு கிடந்தது. அங்கிருந் துசுமார் 200 மீட்டர் தூரம் வரையிலுள்ள மருத்துவமனக்கு செல்லும் சாலை வளாகமும் மின் விளக்குகள் இல்லாமல் நோயாளிகள் தடுமாறும் நிலையில் இருந்தது.
இதனால் இரவு நேரங்களில் மருத்துவமனை வளாகம் முழுவதும் இருட்டாக கிடந்தது. இதுகுறித்து இப்பகுதி மக்களின் கோரிக்கை தொடர்பான செய்தி தினகரன் நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக இருள் சூழ்ந்த அப்பகுதிகளில் மின்விளக்குகள் அனைத்தும் எரியத் தொடங்கியுள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள், நோயாளிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.
மேலும் இப்பகுதியிலுள்ள முட்கள் மற்றும் புதர்களை அகற்ற வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.