தொண்டாமுத்தூர், நவ.15: கோவை பேரூர் அடுத்த பேரூர் செட்டிபாளையத்தில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் மதுக்கடை திறந்ததற்கு குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கோவை பேரூர் செட்டிபாளையம் பகுதியில் புதிதாக ஏசி பாருடன் கூடிய மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிறுவாணி நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் இப்பகுதிவாழ் பொதுமக்கள் மற்றும் பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி தலைவர் சாந்தி பிரசாந்த் ஆகியோர் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் எஸ்பிக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
எங்கள் பகுதியில் சிறுவாணி நகர் அருகில் சிறுவாணி மெயின் ரோட்டில் புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. பூண்டி, ஈஷா மற்றும் கோவை குற்றாலம் போன்ற சுற்றுலா பகுதிகளுக்கு செல்லும் முக்கிய பிரதான சாலையாக இப்பகுதி அமைந்துள்ளதால், போக்குவரத்து அதிகமாக உள்ளது. இதனால் ஏற்கனவே விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், ஆவின் நிறுவனம் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகம் ஆகியவற்றிற்கு அருகே புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. மதுக்கடை முன்பாக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பொதுமக்களுக்கு விபத்துக்கள் ஏற்படும் அபாய நிலை உள்ளது. எனவே மதுக்கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.