ஆரணி, ஆக. 24: களம்பூர் பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வின்போது பேரூராட்சிகளின் இயக்குனரின் காரை கவுன்சிலர்கள் முற்றுகையிட்டு பிட்டரை மாற்றக்கோரி மனு அளித்தனர். களம்பூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் நடை பெற்றுவரும் வளர்ச்சி திட்டப்பணிகளான, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ₹17.98 கோடி மதிப்பில் 5 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள், 4 கிணறுகள், பைப் லைன் அமைத்தல், ₹1.79 கோடியில் சமுதாயக் கூடம், சாலை மற்றும் பக்க கால்வாய் அமைக்கும் பணிகள் என மொத்தம் ₹3.77 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை சென்னை பேரூராட்சிகளின் இயக்குனர் கிரன்குராலா நேற்று அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் நடைபெற்று வரும் மக்கும், மக்கா குப்பைகள் தயாரித்தல், இயற்கை உரம் தயாரித்தல், பொது சுகாதாரப் பணிகள், குடிநீர் திட்டம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார். பின்னர், வார்டுகளில் குடிநீர் முறையாக வழங்கப்படுகிறதா? பொதுகழிப்பறைகள் சுத்துமாக உள்ளதா? வார்டுகளில் குப்பைகள் முழுமையாக அகற்றப்டுகிறதா என நேரில் சென்று பார்வையிட்டார். முன்னதாக, பேரூராட்சிகளின் இயக்குனர் கிரன்குராலா பேரூராட்சி அலுவலக பணிகளை ஆய்வுசெய்தபோது, கவுன்சிலர்கள் ராணிஜெகன், வெங்கடேசன், திருமணிகண்டன், திவ்யபாரதி சீனிவாசன் தலைமையில் கவுன்சிலர்கள் அவரின் காரை முற்றுகையிட்டு, தர்ணாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அதிகாரிகள் கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.
பின்னர், அவர்கள் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: களம்பூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் குடிநீர் பிரச்சினைகள், குடிநீர் பைப் லீக்கேஜ் இருப்பதால், குடிநீர் கலங்கலாக வருகிறது. மேலும், பல்வேறு வார்டுகளில் அடிப்படை வசதிகள் செய்யாததால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி பல்வேறு பிரச்சனைக்குள்ளாகி வருகின்றனர். அதேபோல், மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் முறையாக சுத்தம் செய்யாமலும், பைப் லைன் உடைப்பால் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. மேலும், இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டிய பிட்டர் முரளியிடம் தெரிவித்தாலும், அதனை சரிசெய்ய வராமல் அலுவலகத்தில் இருந்து கொண்டு, அவர் செய்ய வேண்டிய வேலைகளை துப்புரவு பணியாளர்களை வைத்து செய்து வருகிறார். மேலும், பிட்டர் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. அதனால், பீட்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர். தொடர்ந்து, பேரூராட்சிகளின் இயக்குனர் கிரன்குராலா மனுவை பெற்றுக் கொண்டு,விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதன்பேரில், பேரூராட்சி கவுன்சிலர்கள் கலைந்து சென்றனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.