திருத்தணி, ஆக. 23: தினகரன் நாளிதழ் செய்தி எதிரொலியால் அரசு பேருந்து படிகெட்டில் சாகச பயணம் செய்த பள்ளி மாணவர்களை பிடித்த போலீசார், இனி ஜன்னல் கம்பி, படிகெட்டுகளில் பயணம் செய்ய மாட்டோம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதிமொழி ஏற்க வைத்து மாணவர்களை எச்சரித்து அனுப்பினர். திருத்தணி சுற்று வட்டாரங்களில் 50க்கும் மேற்ப்பட்ட கிராமங்களிலிருந்து தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்து திருத்தணியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இந்நிலையில், மாணவர்கள் அரசு பேருந்துகளில் உள்ள பக்கவாட்டு கம்பிகளை பிடித்தப்படியும், பேருந்தின் மேற்கூரை, ஜன்னல் கம்பிகள் பிடித்தவாறும், தொங்கிக் கொண்டும் கால்கள் சாலையில் தேய்த்தவாறு சகாச பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களை தட்டி கேட்கும் பஸ் டிரைவர், கண்டக்டரை மற்றும் பயணிகளை அவதூறாக பேசி வருகின்றனர். மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பயணிகள் அச்சமின்றி பயணம் செய்ய ஏதுவாக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பான செய்தி நேற்று தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியிடப்பட்டது. இந்த செய்தி எதிரொலியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் தலைமையில் போலீசார் நேற்று காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்கள் பயணிக்கும் பேருந்துகள் மற்றும் அவர்களுடன் ஈடுபட்டிருந்த பயணிகளின் நலன் கருதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பேருந்து நிலையத்தில் ஒலி பெருக்கி மூலம் படிக்கெட்டு பயணம் தவிர்த்தல் குறித்தும், படிகெட்டு மற்றும் ஜன்னல் பிடித்து தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் மாணவர்கள் குறித்து பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை திருத்தணி பேருந்து நிலையத்திலிருந்து நல்லாட்டூர் மார்கத்தில் சென்ற தடம் எண் 71 அரசு பேருந்தை சென்னை பைபாஸ் சாலை பகுதியில் நிறுத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன், படிகெட்டு பயணம் செய்த மாணவர்களை பேருந்தில் இறக்கி விட்டு தினகரன் நாளிதழ் வந்த மாணவர்கள் சாகச பயணம் குறித்த செய்தியை காட்டினார். பேருந்தில் படிகெட்டு பயணம் செய்வதால், ஏற்படும் பாதிப்பு, உயிரிழப்பு குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி மாணவர்களை எச்சரித்தார்.
மேலும் பேருந்தில் பயணம் செய்த மாணவர்கள் இனி வரும் காலங்களில் பேருந்தில் படிகெட்டு பயணமோ, ஜன்னல் கம்பி பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டு பயணம் செய்ய மாட்டோம், பேருந்து பயணிகள், பஸ் டிரைவர், கண்டக்டருக்கு தொல்லை ஏற்ப்படுக்க மாட்டோம் என்று போலீசார் முன்னிலையியல் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதனை அடுத்து பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது. அரசு பஸ்சில் தொங்கிக் கொண்டு பயணம் செய்த மாணவர்களிடம் திருத்தணி போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதிமொழி ஏற்கவைத்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.