விருத்தாசலம், அக். 21: பேரி கார்டுகளில் போஸ்டர் ஒட்டியதால் அரசு பள்ளிக்கு தேர்வு பேப்பர் வாங்கி கொடுக்க இளைஞர்களுக்கு டிஎஸ்பி வினோத தண்டனை வழங்கினார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பேரிகாடுகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன. அதில் சினிமா போஸ்டர்கள் அதிக அளவு ஒட்டப்பட்டிருந்தன. இதனால் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் அவதி அடைந்தனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார், பேரிகார்டுகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்றி சுத்தம் செய்ததுடன் போஸ்டர்களை ஒட்டிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தினார்.
அதில் மூன்று இளைஞர்கள் போஸ்டர் ஒட்டியது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த 3 இளைஞர்களையும் வரவழைத்த டிஎஸ்பி ஆரோக்கியராஜ், இதுபோன்ற பகுதிகளில் போஸ்டர் ஒட்டக்கூடாது என அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கி போக்குவரத்து விதிமுறைகளை எடுத்துரைத்தார். பின்பு இதற்கு தண்டனையாக விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மாணவிகளுக்கு பயன்படும் வகையில் தேர்வு பேப்பர் வாங்கி கொடுக்குமாறு உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் தேர்வு பேப்பர் வாங்கி கொடுத்தனர். இளைஞர்களுக்கு நூதன தண்டனை அளித்த டிஎஸ்பிக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டு குவிந்து வருகிறது.