பேராவூரணி , ஜூன் 6: பேராவூரணி பேரூராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது . ஐக்கிய நாடுகள் சபையால் ஆண்டுதோறும் ஜூன் 5ம் நாள் பூமிப்பந்தையும் ,அதன் இயற்கையையும் காப்பாற்ற தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு, பேராவூரணி பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா முன்னிலையில் பேருந்து நிலையத்தில் சுற்றுச்சூழல் தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பூமியையும், அதன் இயற்கை சூழலையும் பாதுகாக்க என்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்.
இயற்கை வளங்களை வீணாக்குவதை குறைக்கும் பழக்கங்களை கடைபிடிப்பேன். ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டேன், ஏற்கனவே பயன்படுத்திய பிளாஸ்டிக் இல்லாத பொருட்களை மீண்டும் பயன்படுத்துவேன், பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக காகிதப் பைகள் மற்றும் துணிப்பைகளை பயன்படுத்தும் பழக்கங்களை மேற்கொள்வேன், என்னால் முடிந்த வரை அனைத்து வகையான பிளாஸ்டிக் பயன்பாடுகளை குறைத்துக் கொள்வேன். முடிந்தவரை மரக்கன்றுகள் நடுவேன் என பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் எழுத்தர் ராஜேஸ் , சுகாதார மேற்பார்வையாளர்கள் வீரமணி , சிவசுப்பிரமணியன் , குடிநீர் மேற்பார்வையாளர் சார்லஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.