பாப்பிரெட்டிபட்டி, ஆக.18: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள சாமியாபுரம் கூட்ரோடு பகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் 62வது பிறந்த நாளையொட்டி, பேனர் வைக்கப்பட்டிருந்தது. அந்த பேனரை நேற்று முன்தினம் நள்ளிரவு, மர்ம நபர்கள் சிலர் கிழித்துள்ளனர். நேற்று காலை இதனை பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பேனரை கிழித்தவர்களை கைது செய்ய வேண்டும் என தெரிவித்து, அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பாப்பிரெட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் அம்சவல்லி, சம்பவ இடத்திற்கு சென்று பேனரை கிழித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதன் பேரில் மறியலை கைவிட்டு விசிகவினர் கலைந்து சென்றனர். இந்த மறியலால், அரூர்-சேலம் சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.