Sunday, June 4, 2023
Home » பேச்சு வரம் தரும் திருப்பதிகங்கள்

பேச்சு வரம் தரும் திருப்பதிகங்கள்

by kannappan
Published: Last Updated on

எவ்வளவுதான் கற்றிருந்தா லும் அதை மற்றவர்களின் மனம் கொள்ளுமாறு எடுத்துரைக்க வேண்டும். இவ்வாற்றல் இல்லாதவர்களை மனமற்ற மலர் என்று, “இனரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது உரை விரித்துரையா தார்”இக்குறளில் குறிப்பிடுகிறார் குறளேருழவர். மற்றவர்கள் முன்பு உரையாடும்போது அவர்களின் மனம் ஏற்றுக் கொள்ளும் வகையில் உரையாட வேண்டும். மாறாக அவர்கள் வெறுக்குமாறு விளம்புதல் விலக்கத் தக்கதாகும். எல்லா ஆயுதங்களால் ஏற்படும் புண்களை விட, நாக்கு என்ற ஆயுதத்தால் ஏற்படும் புண் அதிக வலியை தரும். அதனால்தான் தீயினால் உண்டாவதை ‘புண்’ என்றும் நாவினால் உண்டாவதை ‘வடு’ என்றும் வேறுபடுத்திக் காட்டினார் திருவள்ளுவர். விலங்குகளுக்கும் வாய் இருக்கிறது. நமக்கு வாய் இருக்கிறது. அவற்றால் உண்ணத் தெரியும். ஆனால், உரையாடத் தெரியாது. உரையாடல் என்ற உன்னத குணத்தின் மூலம் நாம் அதிலிருந்து சற்றே உயர்ந்து நிற்கிறோம்.“உண்பதற்கும் உரைப்பதற்கும் என இரு பெரும் தொழில்களைச் செய்வதனால் நம் வாய் ஞானேந்திரியங்களுள் ஒன்றாகவும். ஐந்தும் கன்மேந்திரியங்களுள் ஒன்றாகவும் உள்ளது” என்பார் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்.இத்தகு சிறப்பு மிக்க வாய் வழங்கும் வார்த்தைகளால் கூட நாம் அறம் செய்ய முடியும். பொன்னையும் பொருளையும் மட்டுமே இன்னொருவருக்கு வழங்க முடியும் என்பதில்லை. நல்ல சொற்களைக் கூட வழங்க முடியும். அதனால்தான் பாரதியார் “வாய்ச்சொல் தாரீர்” என்று வார்த்தைகளை யாசகம் கேட்கிறார். திருமூலரும்கூட “யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே” என்கிறார்.ஒருமுறை வீரத்துறவி விவேகானந்தரிடம் ஒரு பிச்சைக்காரர் யாசகம் கேட்கிறார். அப்போது அவரிடம் பணம் ஏதும் இல்லை. காரணம் அவர் உண்மையான துறவி. அந்த யாசகரிடம்,  “சகோதரா உனக்கு தருவதற்கு என்னிடம் எதுவுமில்லை” என்று சொல்கிறார் விவேகானந்தர். “இதைவிட தாங்கள் எனக்கு எதையும் தந்துவிட முடியாது” என்று கூறி மனம் மகிழ்ந்தார் அந்த யாசகர். ஆம். “சகோதரா” என்ற அன்பு மொழியைவிட பொன்னும் பொருளும் அவ்வளவு பெரிதல்லவே.ஆகவே, நன்மொழி பேசுவதும் நல்லறம்தான். இன் சொற்களையே எப்போதும் இவ்வுலகம் ஏற்றிப் போற்றுகிறது. வன்சொற்களை இவ்வையகம் வரவேற்பதில்லை. இதை,“இன்சொலால் அன்றி இருநீர் வியனுலகம் வன்சொலால் என்றும் மகிழாதே”என்று குறிப்பிடுகிறது நன்னெறி.இனிய சொற்களை விட்டுவிட்டு கடுஞ்சொற்களைப் பேசுவது என்பது கனிந்த கனி உன் தோட்டத்திலேயே இருக்கும்போது மாற்றான் தோட்டத்துக் காயை அத்துமீறி களவாடித் தின்பதற்குச் சமம் என்பதை, “இனிய உளவாக இன்னாது கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று” என்கிறது பொதுமறை.இனிமையான சொற்களை நலமான மேடையில் முழங்குவது என்பது நானிலத்தில் அனைவருக்கும் வாய்ப்பதில்லை. ஒரு சபையில் அமர்ந்து கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் நூற்றில் ஒருவருக்கும் கவிபாடும் திறன் ஆயிரத்தில் ஒருவருக்கும்தான் வாய்க்கும். ஆனால், சபை நடுவே நின்று நல்லுரை நல்கும் பேறு பத்தாயிரம் பேரில் ஒருவருக்கு மட்டும்தான் கிடைக்கும், இதை,“ஆர்த்த சபை நூற்றொருவர், ஆயிரத்து ஒன்றாம் புலவர்,வார்த்தை பதினாயிரத்து ஒருவர்” என்கிறார் தமிழ் மூதாட்டி ஔவையார். இத்தகைய பேச்சு வன்மை நமக்கு வாய்க்க வேண்டுமெனில் நம்மைக் கருவிலேயே உணவு கொடுத்துக் காத்த திருவருளையேதான் நாடவேண்டும். கருவிலேயே திருவுடையவரான திருஞான சம்பந்தர் சீர்காழியில் இருந்து திருக்கோலக்கா என்ற தலத்திற்கு வருகிறார். வரும்போது கையால் தாளமிட்டுகொண்டே தேவாரத்தை நாவாரப் பாடிவருகிறார்.இதைக்கண்ட அத்தலத்தின் இறைவி மூன்று வயதுக் குழந்தையின் விரல்கள் தாளமிட்டால் தாங்காதே, சிவந்து விடுமே என்று ஏங்கியவளாய் தன் வலப்பக்கத்தே வீற்றிருந்த சிவபெருமானிடம் சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞான சம்பந்தனின் விரல்கள் சிவந்துவிடும். வேண்டத்தக்கதை அறியும் விழுப்பொருளே! விரைந்து அருள் செய்தருள்க” என விண்ணப்பம் செய்தாள். உடனே இறைவன், “நமசிவாய” என்னும், திருவைந்தெழுத்து எழுதப்பட்ட, பொன்னாலான தாளத்தை சம்பந்தருக்கு வழங்கியருளினார். உலோகம் பொன் என்பதால் அதிலிருந்து ஓசை எழவில்லை. அப்போது உலக நாயகியாகிய உமையம்மை அந்த உலோகத்திற்கு (தங்கத் தாளத்திற்கு) ஓசையை வழங்கியருளினாள். அதனால் அத்தலத்தின் இறைவி ”ஓசை கொடுத்த நாயகி” என்னும் திருப்பெயர் பெற்றாள். தாளம் வழங்கிய தலம் என்பதால் இத்தலம் திருத்தாளமுடையார் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இவ்வரிய வரலாற்றை, “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகவர்முன் தாளம் ஈந்த தன்மையாளன்” என்று சுந்தரர் தம் திருப்பாட்டில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.உயிரற்ற ஒரு ஊலோகமே இத்தலத்தில் ஓசை பெற்றது என்றால், நாளும் ஓசை எழுப்பி பேசும் வரத்தை இத்தலத்துப் பெருமான் அருளுவார். அதற்கு  அப்போது ஞான சம்பந்தர் பாடிய பதிகம் நமக்குத் துணை செய்யும்.நல்ல வாக்குவன்மை அடைய இப்பதிகத்தை ஓதி இறைவனை வழிபட வேண்டும்.பிறந்த குழந்தைகள் சில மாதங்களில் சினுங்க வேண்டும். பின்னர் குதலை மொழியும் மழலை மொழியும் பேச வேண்டும். ஒவ்வொரு பெற்றோருக்கும் தான்தான் குழந்தையின் ‘அம்மா அப்பா’ என்று தெரியும். தெரிந்தாலும்கூட, தான் பெற்ற குழந்தை “அம்மா” என்றும் “அப்பா” என்றும் அன்பு மிக அழைப்பதில் ஏற்படும் ஆனந்தம்  பேரானந்தம் தான். சில குழந்தைகள் விதிவசத்தால் பேசுவதில்லை. அந்த குழந்தைகளை அழைத்துக்கொண்டு இத்தலத்திற்குச் சென்று ஆனந்த தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு அங்கே தேனையும் தினைமாவையும் வைத்து திருவமுது படைத்து அதை குழந்தைக்கு ஊட்டி, இடைவிடாது நாள்தோறும் இத்தலத்தின் திருப்பதிகத்தை முழு நம்பிக்கையுடன் பாராயணம் செய்து வந்தால் பேச்சு வன்மை வாய்க்கும் என்பது திண்ணம். தமிழ்நாட்டில் பிறந்து இன்று அயல் நாட்டில் மருத்துவர்களாக விளங்கும் ஒரு தம்பதியருக்குப் பிறந்த குழந்தை இரண்டு வயதாகியும் பேசவில்லை. அப்போது மீளாத் துயரத்தில் மாளத் தயாராகினர். அந்த நேரத்தில் ஒரு சிவனடியார் இத்தலத்துப் பெருமையைச் சொல்லி இங்கே சென்று வழிபட ஆற்றுப்படுத்தினார். அப்பெற்றோரும் அவ்வண்ணமே செய்தார்கள்.தற்போது அவர்களின் குழந்தை அழகாகப் பேசுகிறது. ஆற்றுப்படுத்திய சிவனடியாரை அயல்நாட்டிலிருந்து வீடியோ காலில் தொடர்பு கொண்டு நன்றி சொல்கிறது என்று அந்தச் சிவனடியார் தம் அனுபவத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.சீர்காழிக்கு அருகில் அமைந்துள்ள இந்த திருக்கோலக்கா சப்தபுரி என்றும் அழைக்கப்படுகிறது.இசைக் கலையில் வல்லவர்களாகவும் இனிய சொற்பொழிவாளர்களாகவும் வளர இத்தலத்து இறைவனை வழிபட்டு இங்குள்ள மண்டபத்தில் தம் கலையை இன்றளவும் வெளிப்படுத்துகின்றனர்.சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் கோயிலிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இத்தலம், தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் காவிரி வடகரைத் தலங்களில் 15வது தலமாகும். நாவன்மை பெற இத்தலத்தில் ஞானசம்பந்தர் பாடியருளிய பதிகத்தைப் பாடி பரமனைப் பணிதல் வேண்டும்.திருச்சிற்றம்பலம்[1]மடையில் வாளை பாய, மாதரார்குடையும் பொய்கைக் கோலக்கா உளான்சடையும், பிறையும், சாம்பல் பூச்சும், கீழ்உடையும், கொண்ட உருவம் என்கொலோ?[2]பெண்தான் பாகம் ஆக, பிறைச் சென்னிகொண்டான், கோலக்காவு கோயிலாக்கண்டான், பாதம் கையால் கூப்பவே,உண்டான் நஞ்சை, உலகம் உய்யவே.[3]பூண் நல் பொறி கொள் அரவம், புன்சடை,கோணல் பிறையன், குழகன், கோலக்காமாணப் பாடி, மறை வல்லானையேபேண, பறையும், பிணிகள் ஆனவே.[4]தழுக் கொள் பாவம் தளர வேண்டுவீர்!மழுக் கொள் செல்வன், மறி சேர் அம்கையான்,குழுக் கொள் பூதப்படையான், கோலக்காஇழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே![5]மேலே செல்மயில் ஆர் சாயல் மாது ஓர் பாகமா,எயிலார் சாய எரித்த எந்தை தன்குயில் ஆர் சோலைக் கோலக்காவையேபயிலா நிற்க, பறையும், பாவமே.[6]வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்!கடி கொள் கொன்றை கலந்த சென்னியான்,கொடி கொள் விழவு ஆர் கோலக்காவுள் எம்அடிகள், பாதம் அடைந்து வாழ்மினே![7]நிழல் ஆர் சோலை நீலவண்டு இனம்,குழல் ஆர், பண் செய் கோலக்கா உளான்கழலால் மொய்த்த பாதம் கைகளால்தொழலார் பக்கல் துயரம் இல்லையே.[8]எறி ஆர் கடல் சூழ் இலங்கைக் கோன்தனைமுறை ஆர் தடக்கை அடர்த்த மூர்த்தி தன்குறி ஆர் பண் செய் கோலக்காவையேநெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே.[9]நாற்றமலர்மேல் அயனும், நாகத்தில்ஆற்றல் அணை மேலவனும், காண்கிலா,கூற்றம் உதைத்த, குழகன்-கோலக்காஏற்றன்-பாதம் ஏத்தி வாழ்மினே![10]பெற்ற மாசு பிறக்கும் சமணரும்,உற்ற துவர் தோய் உரு இலாளரும்,குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப்பற்றிப் பரவ, பறையும், பாவமே.[11]நலம் கொள் காழி ஞானசம்பந்தன்,குலம் கொள் கோலக்கா உளானையேவலம் கொள் பாடல் வல்ல வாய்மையார்,உலம் கொள் வினை போய், ஓங்கி வாழ்வரே.சிவ.சதீஸ்குமார்…

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi