பெரம்பலூர், செப்.14: பெரம்பலூர் மாவட்டத்தில் அண்ணா, பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித்துறை மூலம் நடத்தப்படும் பேச்சு போட்டியில் பங்கேற்க கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் கற்பகம் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தலைவர்களான காந்தி, நேரு, அம்பேத்கார், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளன்று, மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. தற்போது பள்ளிகளுக்கு வருகிற 15ம் தேதி முதல் காலாண்டு தேர்வு நடைபெற உள்ளதால் தேர்வு முடிந்தவுடன் பேச்சு நடத்தபெறும். எனவே தற்போது கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் பேச்சு போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, 2023ம்ஆண்டு அண்ணா பிறந்த நாளையொட்டி வரும் 15ம்தேதி அன்றும், பெரியார் பிறந்த நாளையொட்டி 19ம்தேதி அன்றும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுத்தொகைகள் வழங்கப்பட உள்ளது. இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாளையொட்டி வருகிற 15ம் தேதியன்றும், பெரியார் பிறந்த நாளையொட்டி வருகிற 19ம் தேதியன்றும் பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள, மாவட்ட பாரத சாரண சாரணியர் பயிற்சி மையத்தில் (தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரியின் அருகில்) கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இப்போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000, 2ம் பரிசு ரூ3.000 மற்றும் 3ம் பரிசு ரூ.2,000 என்ற வகையில் வழங்கப்பட உள்ளது. இப்போட்டியானது காலை 9 மணிக்கு தொடங்கப்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள், கல்லூரி கல்வி இயக்குநர் வாயிலாக அந்தந்த கல்லூரி முதல்வரிடம், அனுமதி பெற்று இந்த பேச்சுப் போட்டியில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.