நாகர்கோவில், ஆக.23: பேச்சிப்பாறை அணையில் நீர்மட்டம் சரிவு காரணமாக தண்ணீர் வெளியேற்றம் வினாடிக்கு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் நடைபெறாத காரணத்தினால் ஒரு வார காலம் குறைந்த அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில் தொடர்ந்து வினாடிக்கு 800 கன அடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மழை குறைவால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து, நீர்மட்டம் சரிய தொடங்கியது.
இதனால் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 700 கன அடி வரை தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது அது 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 19.50 அடியாக இருந்தது. அணைக்கு 262 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. பெருஞ்சாணி நீர்மட்டம் 26.05 அடியாகும். அணைக்கு 9 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. சிற்றார்-1ல் 11.28 அடியும், சிற்றார்-2ல் 11.38 அடியும் நீர்மட்டம் உள்ளது. பொய்கையில் 10.50 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 3.28 அடியும் நீர்மட்டம் காணப்படுகிறது. முக்கடல் அணையின் நீர்மட்டம் மைனஸ் 12.40 அடியாகும்.
முக்கடல் அணையில் இருந்து வினாடிக்கு 8.6 கன அடி தண்ணீர் குடிநீருக்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. குளத்து பாசன பகுதிகளில் நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் விளைச்சல் நிறைவு பெற்று அறுவடை நடந்து வருகிறது. கால்வாய் பாசன பகுதிகளில் தண்ணீர் விநியோகம் குறைந்து வருகிறது. பெச்சிப்பாறை அணை நீர்மட்டம் சரிந்து வருவதால் கன்னிப்பூ சாகுபடி முழுவதும் தண்ணீர் விநியோகம் செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.