சென்னை: குழந்தைகள் பெற்றோர்கள் மேற்பார்வையில் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை: தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கலாம்.
அமைதியான மண்டலங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்கள், மத ஸ்தலங்கள், அரசு அலுவலகங்கள் போன்ற பிற முக்கிய இடங்களில் பட்டாசுகளை வெடித்தல் சட்டப்படி தண்டனைக்குரியது. குழந்தைகள் பெற்றோர்மேற்பார்வையில் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிப்பதை உறுதி செய்ய வேண்டும். தீப்பிடிக்காமல் இருக்க பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். பட்டாசுகளை கையில் வைத்து வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
மெழுகுவர்த்திகளை எரியும் இடத்தில் பட்டாசுகள் வைப்பதை தவிர்க்க வேண்டும். மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளுக்கு அருகில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். வாகனங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பட்டாசுகள் உடனடியாக வெடிக்காமல், வெடிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டால், அவற்றை கைகளால் தொடுவதை தவிர்க்க வேண்டும். பட்டாசுக் கழிவுகளை வீடுகளில் உள்ள ஈரமான அல்லது உலர் கழிவுகளுடன் சேர்க்க வேண்டாம். பட்டாசு கழிவுகளை சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்படும் குப்பை தொட்டிகளில் கொட்டக்கூடாது.