ஒடுகத்தூர், ஆக.20: ஒடுகத்தூர் அருகே காலில் விழுந்து கதறியும் பெற்றோரை உதறி தள்ளி விட்டு காதல் கணவனின் கரம் பிடித்தார் கல்லூரி மாணவி. காவல் நிலையத்தில் நடந்த பாச போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த குருவராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம் பெண். இவர் அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த 22 வயதுடைய வாலிபருக்கும் நட்பு ரீதியாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வரவே காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனால், காதல் ஜோடிகளை அவரவர் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இந்நிலையில், இளம் காதல் ஜோடிகள் நம்மை பிரித்து விடுவார்களோ என்று எண்ணி, நேற்று முன்தினம் இரவு இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். பிறகு, அன்று இரவு முழுவதும் திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் தங்கி விட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், பெற்றோர்கள் தங்களை தேடுவதை அறிந்த காதல் ஜோடி நேற்று மாலை வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். தகவலறிந்த இரு வீட்டாரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தில் திரண்டனர். அப்போது, பெண்ணின் பெற்றோர் தனது மகளிடம் எவ்வளவோ எடுத்து கூறியும் அவர் மவுனமாகவே இருந்தார். ஒரு கட்டத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுதபடி எங்களோடு வந்துவிடு என கூறி தங்களது மகளின் காலில் விழுந்தனர். ஆனாலும், அந்த பெண் தன் காதலனின் கரங்களை இறுக பற்றிக் கொண்டு எதுவும் நடக்காதது போல் இருந்தார். இந்த பாசப்போராட்டம் அங்கிருந்தவர்களின் கல் நெஞ்சையும் கரையச்செய்தது. சுமார் 2 மணி நேரமாக நடந்த இந்த பாசப்போராட்டத்தால் காவல் நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.