திருவண்ணாமலை, ஜூன் 17: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நேற்று நடந்தது. அதில், டிஆர்ஓ ராம்பிரதீபன், ஆர்டிஓ ராஜ்குமார், மாவட்ட மறுவாழ்வு அலுவலர் செந்தில்குமாரி, இளநிலை மறுவாழ்வு அலுவலர் சூர்யா உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கல்வி உதவித் தொகை, வங்கிக் கடனுதவி, முதியோர் உதவித் தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் உபகரணங்கள், கலைஞரின் வீடு வழங்கும் திட்டம், சாலை வசதி, குடிநீர் வசதி, தாட்கோ கடனுதவி, பயிர் கடன் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 548 நபர்கள் மனு அளித்தனர்.
பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டார். மேலும், கடந்த வாரங்களில் பெறப்பட்ட மனுக்கள் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தினார். மேலும், கலெக்டர் அலுவலக தரைதளத்தில் மனு அளிக்க காத்திருந்த மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கலெக்டர் மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார். அப்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை விரைந்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்நிலையில், செங்கம் அடுத்த தாழையூத்து கிராமத்தைச சேர்ந்த விவசாயி முனியன்(60) என்பவர், திடீரென மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அதைத்தொடர்ந்து, போலீசார் விரைந்து வந்து தடுத்து நிறுத்தினர். அவரிடம் நடத்திய விசாரணையில், பட்டா மாற்றம் தொடர்பாக அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க தாமதமானதால், தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, அவரிடம் இருந்த மனுவை பெற்றுக்கொண்ட அலுவலர்கள், விசாரணை நடத்துவதாக தெரிவித்தனர். மேலும், தீக்குளிக்க முயன்ற முதியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, எச்சரித்து அனுப்பினர்.
மேலும், குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்திருந்த ஒரு குடும்பத்தினர், முன் விரோதம் காரணமாக அவர்களுக்குள் திடீரென கைகலப்பில் ஈடுபட முயன்றனர். அதைத்தொடர்ந்து, போலீசார் அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர். அதோடு, வழக்கம் போல தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்களை தடுக்க, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பொதுமக்கள் கொண்டுவந்த பை, பொருட்கள், குடிநீர் பாட்டில்கள் போன்றவற்றை ேசாதித்தபிறகே அலுவலகத்துக்குள் அனுமதித்தனர்.